logo
செங்குந்த மகாஜன சமூகத்திற்கு 10 தொகுதிகளை ஒதுக்கும் கட்சிகளுக்கே சட்டமன்ற தேர்தலில்    ஆதரவு:ஈரோட்டில் மாநில தலைவர் அறிவிப்பு

செங்குந்த மகாஜன சமூகத்திற்கு 10 தொகுதிகளை ஒதுக்கும் கட்சிகளுக்கே சட்டமன்ற தேர்தலில் ஆதரவு:ஈரோட்டில் மாநில தலைவர் அறிவிப்பு

06/Feb/2021 10:35:43

ஈரோடு, பிப் :தமிழக சட்டமன்ற தேர்தலில் செங்குந்த மகாஜன சமூகத்திற்கு 10 தொகுதிகளை ஒதுக்கும் கட்சிகளுக்கே 

நாங்கள் ஆதரவளிப்போம் என்றார்தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில தலைவர் கே.பி.கே.செல்வராஜ்.

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில் மேலும்  அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எங்களது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சென்னிமலையில் உள்ள திருப்பூர் குமரனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என ஆணை பிறப்பித்துள்ளார். மணி மண்டபம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம்  வழங்கியுள்ளோம். எங்களது நீண்ட நாள் கோரிக்கையான தைப்பூச நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி வந்தோம். அதன்பேரில், நடப்பாண்டு முதல் தைப்பூச நாள் அரசு விடுமுறையாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

உழுதவனுக்கு நிலம் சொந்தம் என்பது போல, நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக இருந்த பவாடி நிலங்களை பட்டா வழங்க வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதனையும் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் செங்குந்த முதலியார்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 15 சதவீதம் உள்ளனர். அதற்காக வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட 15 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்க வலியுறுத்தி அனைத்து கட்சியினரிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்.

 அந்த வகையில், தமிழக முதல்வரிடமும், அவர் சார்ந்த அ.தி.மு.க.விலும் 15 சதவீதம் இட ஒதுக்கீட்டினை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். வன்னியர்களுக்கு 20 சதவீதம் உள் ஒதுக்கீடு கேட்பதைப்போல பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள கைக்கோல முதலியார் சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்கும் கட்சிகளுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள செங்குந்த முதலியார்கள் அனைவரும் ஒரு அணியில் நின்று எங்களது வாக்குகளை அளிப்போம்.

ஈரோடு மாவட்டத்தை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் சுமார் 60 தொகுதிகள் உள்ளன. அந்த 60 தொகுதிகளிலும் செங்குந்த முதலியார்கள் பரவலாக உள்ளனர். இந்த முறை செங்குந்த முதலியார் சமூகத்திற்கு மேற்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, பெருந்துறை, சேலம், நாமக்கல், குமாரபாளையம் போன்ற தொகுதிகளில் 10 தொகுதிகளை கேட்கிறோம். இந்த தொகுதிகளை ஒதுக்கும் கட்சிகளுக்கே நாங்கள் ஆதரிப்போம்.

 எங்களுக்கு தேர்தலில் அதிக இடத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் கட்சி தி.மு.க, அ.தி.மு.க. போன்ற எந்த கட்சியாக இருந்தாலும் சரி வெற்றி வாய்ப்பை பொறுத்து போட்டியிடுவோம். அப்படி தொகுதி ஒதுக்கா விட்டால், நாங்கள் தனித்து போட்டியிடுவோம். அதுவும் ஒரு புதிய கட்சியை துவங்கி, எங்களது சின்னத்தில் போட்டியிடுவோம். ஆனால், நாங்கள் கூட்டணியுடன் தான் போட்டியிடுவோம் என 99 சதவீதம் நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார்.பேட்டியின்போது, மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி உடன் இருந்தார்.

Top