logo
பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9 , பிளஸ்-1 வகுப்புகள் தொடக்கம்: ஈரோடு மாவட்டத்தில் 403 பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9 , பிளஸ்-1 வகுப்புகள் தொடக்கம்: ஈரோடு மாவட்டத்தில் 403 பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

02/Feb/2021 03:57:27

ஈரோடு, பிப்: கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் ஆன் லைன் ஆப்புகள் மூலமாகவும், அரசு தொலைக்காட்சிகள் மூலமாகவும் மாணவ மாணவிகள் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.


  கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் மீண்டும் பள்ளிகளை திறக்கலாமா  என்று பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. முதலில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க வேண்டாம் என்று கூறியதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பொது தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தது.



 இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  எஸ்.எஸ்.எல் சி , மற்றும் பிளஸ்-2 மாணவ மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாமா  என்று மீண்டும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் 95 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளை பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் எஸ்.எஸ். எல். சி மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள் மற்றும் வீடுகள் திறக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 9-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. 


இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. அதன்படி வரும் 8-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதாவது ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வகுப்பு நுழைவாயில் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் உட்பட பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டி முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் ஒன்வகுப்புகளை திறக்க அந்தந்த மாவட்ட பள்ளிக் கல்வித் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

அதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் 403 பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் 14 ஆயிரத்து 631 மாணவர்களும், 13 ஆயிரத்து 762 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 393 மாணவ மாணவிகளும், 11-ம் வகுப்பில் 11 ஆயிரத்து 957 மாணவர்களும், 12,916 மாணவிகள் என மொத்தம்  24 ஆயிரத்து 873 மாணவ-மாணவிகள் என மொத்தம் 53 ஆயிரத்து 266 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் பள்ளி திறப்பை ஒட்டி வகுப்புகளை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  வகுப்புகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.  வகுப்புகளில் உள்ள பழுதடைந்துள்ள பிளாக் போர்டு சரி செய்யப்பட்டு வருகிறது.மேலும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Top