logo
விடுதலையானார் சசிகலா… சிகிச்சைக்குப்பின் பிப்ரவரியில் தமிழகம் திரும்புகிறார்

விடுதலையானார் சசிகலா… சிகிச்சைக்குப்பின் பிப்ரவரியில் தமிழகம் திரும்புகிறார்

28/Jan/2021 04:48:51

 சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா  விடுதலையாகி உள்ளார். சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கான உத்தரவை சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் வழங்கினார்.

2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டிகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி  அபராதமும் விதிக்கப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட ரூ 10 கோடியையும் அவர் செலுத்திவிட்டார். சொத்து குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்ப்ட்ட அபராத தொகையை சசிகலா கட்டிய நிலையில், அவரது தண்டனை காலமும் இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து சசிகலா இன்று சிறையில் இருந்து விடுதலையானார்.

சசிகலா இன்று விடுதலையாவார் என கர்நாடக சிறைத்துறை அறிவித்த நிலையில், சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் பெரும் மாற்றமும், புதிய திருப்பமும் ஏற்படும் என கூறப்பட்டது. இதனிடையே, கடந்த 20-ஆம் தேதி திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்ட சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விடோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதன் காரணமாக சசிகலாவின் விடுதலையில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஜன.27-இல் விடுதலை செய்யப்படுவார் என சிறை துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா  விடுதலையானார்.

இதற்காக விடுதலை தொடர்பான ஆவணங்களை மருத்துவமனையில் உள்ள சசிகலாவிடம் கர்நாடக சிறைத்துறை கண்காணிப்பாளர் லதா தலைமையிலான குழு மருத்துவமனைக்கு சென்று ஆவணங்களில் சசிகலாவின் கையொப்பம் பெற்று பின் அதற்கான நகலை மருத்துவமனை நிர்வாகத்திடமும் வழங்கி, சசிகலா தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவித்தனர். அவரது போலீஸ் பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், கொரோனா விதிப்படி சசிகலா 10-ஆவது நாள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று உடன் 3 நாட்கள் சுவாச கருவி இல்லாமல் சுவாசிக்கும் பட்சத்தில் 10-ஆவது நாள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மேலும் விக்டோரியா மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடர்வது குறித்து சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் முடிவை பொருத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், சிறை தண்டனை முடிந்து சசிகலா விடுவிக்கப்பட்டு விட்டாலும், தொடர்ந்து கொரொனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவதால் அவர் பூரண குணமடைந்து வருகின்ற பிப்ரவரி 3-ஆம் தேதி வாக்கில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்ப, சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Top