logo
சசிகலா வருவதை அதிமுகவினர் எதிர்ப்பது வருத்தமாக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

சசிகலா வருவதை அதிமுகவினர் எதிர்ப்பது வருத்தமாக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

26/Jan/2021 08:37:07

சசிகலாவால் அதிமுகவில் பலர் ஆதாயம் பெற்றுள்ள நிலையில், தற்போது அவர் கட்சிக்கு வருவதை அதிமுகவினர் எதிர்ப்பது வருத்தமாக உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் சனிக்கிழமை, கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பிரேமலதா விஜயகாந்த், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தார்.

இதன்பின்னர் கூட்டத்தில் பேசிய அவர்,தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையொட்டி கட்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த வாரம் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நாளை வந்தாலும் அதற்கு தேமுதிக தயாராக இருக்கிறது.

விஜயகாந்தையும் அவர் தொடங்கிய கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதன் அடிப்படையில் நான் செயல்பட்டு வருகிறேன். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் என்பதால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இருக்காது என்று கருத்துக்கணிப்பு வருகிறது. தேமுதிகவை பொறுத்தவரை கூட்டணியில் இருப்பதால் அமைதி காத்து வருகிறோம். விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். 

சசிகலாவால் அதிமுகவினர் பலர் ஆதாயம் பெற்றுள்ளனர். ஆனால் அவர் தற்போது வருவதை அதிமுகவினர் எதிர்க்கின்றனர். இது வருத்தமாக உள்ளது. ஒரு பெண் என்ற முறையில் அவரை நான் அரசியலுக்கு வரவேற்கிறேன். அவர் சிறையில் இருந்து வந்து மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் ஜெயலலிதாவுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சசிகலா அவர் அதிமுகவில் தனது பணியைத்தொடர வேண்டும் என்று குறிப்பிட்டார் 


                                                   


Top