logo
அரசியலில் சாதாரணமப்பா... அன்று சிவாஜிகணேசன்... இன்று ரஜினிகாந்த்

அரசியலில் சாதாரணமப்பா... அன்று சிவாஜிகணேசன்... இன்று ரஜினிகாந்த்

11/Jan/2021 10:35:43

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரக்கோரியும் கட்சி தொடங்குமாறும் வலியுறுத்தியும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அவர் தனது உடல்நிலை குறித்து எந்தளவுக்கு விளக்கி கூற முடியுமோ அந்தளவுக்கு எடுத்துக்கூறியும் தங்கள் தலைவர் மீது பாவம் காட்டுவதாக தெரியவில்லை ரஜினி ரசிகர்கள்.


இன்று ரஜினிகாந்தை எப்படி அவரது ரசிகர்கள் கட்சி தொடங்குமாறு கூறி வருகிறார்களோ அதேபோல் தான் அன்று சிவாஜி கணேசனையும் அவரது ரசிகர்கள் வலியுறுத்தி கட்சி தொடங்க வைத்தனர். ரஜினி ரசிகர்களே உங்க தலைவருக்கு நெருக்கடி தருவது சரிதானா அல்லது தூண்டிவிடப்படுகிறீர்களா.


சிவாஜி நடிகர் திலகம் சிவாஜிகணேசனை பொறுத்தவரை எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர். திமுக அனுதாபியாக தொடக்கத்தில் செயல்படத் தொடங்கிய அவர், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கருதி தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் சிவாஜிக்கும் மூப்பனாருக்கும் இடையேயான உறவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை.  கோஷ்டிப்பூசல் காங்கிரஸ் கட்சியில் இன்று உள்ள கோஷ்டிப்பூசல் அன்றும் இருந்தது. அது சிவாஜியையும் விட்டு வைக்கவில்லை. இருப்பினும் வேட்பாளர் தேர்வு தொடங்கி பிரச்சாரம் வரை பல விவகாரங்களிலும் சிவாஜியின் பங்களிப்பு இருந்து வந்தது.


 இதனிடையே சினிமாவை கடந்து எம்.ஜி.ஆருடன் நட்புறவு பேணி வந்த சிவாஜி அதை அரசியலிலும் தொடர்ந்தார். இந்திரா காங்கிரஸ் தனது நண்பர் எம்.ஜி.ஆர். மரணமடைந்த தருணத்தில் ஜானகி எம்.ஜி.ஆருக்கு இந்திரா காங்கிரஸ் உறுதுணையாக இருக்க வேண்டும் என நினைத்தார் சிவாஜி. இது தொடர்பாக ராஜீவ்காந்தியை சிவாஜி சந்தித்து பேச முயன்றும் அது முடியாமல் போனது. இதனிடையே ஜானகி தலைமையிலான அரசுக்கு இந்திரா காங்கிரஸ் ஆதரவு கொடுத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார் சிவாஜி.

 முரண்பட்ட முடிவு ஆனால் ஜானகி தலைமையிலான அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் ராஜீவ்காந்தி. தன் குரலுக்கு மதிப்பில்லாத இடத்தில் இனியும் இருந்து என்ன பயன் எனக் கருதி காங்கிரஸில் இருந்து விலகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டார் சிவாஜி. ஜானகி எம்.ஜி.ஆர். விவகாரத்தில் ராஜீவ்காந்தி எடுத்து முரண்பட்ட முடிவை கடுமையாக சாடினார் சிவாஜி. இனி நான் காங்கிரஸ்காரன் அல்ல இந்தியன், அதிலும் தமிழன் எனக் குறிப்பிட்டிருந்தார்.


 அரசியலே வேண்டாம் போதுமடா சாமி அரசியலே வேண்டாம் என நினைத்திருந்த சிவாஜியை விடுவார்களா அவரது ரசிகர்கள். தனிக் கட்சி தொடங்க வேண்டும் என உரக்க குரல் எழுப்பத் தொடங்கினர். பிள்ளைகளா அது சரிபட்டு வராது என்று எத்தனையோ முறை எடுத்துக் கூறினார்.இப்போது எப்படி ரஜினி ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்துகிறார்களோ அதேபோல் சிவாஜியையும் தனிக்கட்சி தொடங்குமாறு அவரது பிள்ளைகள் வற்புறுத்தி அழைத்தனர். 


பிறகு ஒருவழியாக 1988-ம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய சிவாஜிகணேசன் கட்சிக் கொடியையும் வெளியிட்டார். வெள்ளை -சிவப்பு என்ற இருவண்ணக் கொடியை அறிமுகப்படுத்தி வெள்ளை நிறம் தூய்மையையும், சமாதானத்தையும் வெளிப்படுத்துவதாகவும் சிவப்பு நிறம் தியாகத்தையும், உழைப்பையும் வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.

சிவாஜி ரசிகர்கள் இப்போது ரஜினி ரசிகர்கள் எப்படி போஸ்டர் ஒட்டுகிறார்களோ அதற்கெல்லாம் ஒரு படி மேலாக, அதுவும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எட்டப்பனை அடக்க வந்த கட்டபொம்மன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் தாங்கிய சுவரொட்டிகளை தமிழகம் முழுவதும் ஒட்டினர் சிவாஜி ரசிகர்கள். சிவாஜி கட்சியில் மேஜர் சுந்தர்ராஜன் தொடங்கி இன்னும் பல அந்தக் கால நடிகர்கள் இணைந்தனர். ரஜினியும் கமலும் 1989 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது சிவாஜிகணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி. அந்த தேர்தலில் 49 இடங்களில் சிவாஜி கணேசன் கட்சி போட்டியிட்டது. 

தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் சிவாஜி களம் கண்டார். அவருக்கு ஆதரவாக ரஜினியும் கமலும் பிரசாரம் செய்யவிருந்து அந்த திட்டத்தை திடீரென கைவிட்டனர். இதனிடையே சிவாஜிகணேசன் உட்பட போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அவரது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.

அதுவரை சிவாஜிகணேசன் மீதிருந்த இமேஜை அந்த தேர்தல் பதம் பார்த்தது. தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க நினைத்த சிவாஜி தனது ரசிகர்களின் வற்புறுத்தல் காரணமாக கட்சி தொடங்கி கரையேற முடியாமல் தவித்தார்.

இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை எண்ணிப்பார்த்தும், உடல்நிலையை கருத்தில் கொண்டும் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று ரஜினிகாந்த் டிசம்பர் 3-ஆம் தேதி அறிவித்து விட்டு பிறகு 3 வாரங்களில் முடிவை மாற்றிக் கொண்டு கட்சியே துவங்கப்போவதில்லை என அறிவித்தார்.

அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க விரும்பும் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் கட்சி தொடங்க வலியுறுத்துவது சிவாஜி கால அரசியலையே நினைவூட்டுகிறது.ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்  என வலியுறுத்தி  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள்  நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதித்துள்ளது. 

இதனால் ரஜினி வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் போராட்டம் இந்தப் போராட்டமானது ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர், ரஜினி மக்கள் மன்ற மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளர் ராம்தாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்  நிர்வாகிகள் நூற்றுக்கணக்கில் பங்கேற்று ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

 

Top