logo
ஈரோடு வழியாக  பாசஞ்சர் ரயில் இயக்கப்படுமா ? பயணிகள் எதிர்பார்ப்பு

ஈரோடு வழியாக பாசஞ்சர் ரயில் இயக்கப்படுமா ? பயணிகள் எதிர்பார்ப்பு

11/Jan/2021 10:08:00

ஈரோடு, ஜன:  ஈரோடு வழியாக தினமும் 70- க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.  கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டில் மார்ச் மாதம் 24 -ஆம் தேதி முதல் ரயில்கள் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.  அதன் பின்னர் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதுடன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் சிறப்பு ரெயில்கள் என்ற பெயரில்  அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் உடன் இயங்கி வருகிறது. இதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும்.


  கொரோனா காலம் என்பதால் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பொது பெட்டியை தவிர்த்து வருவதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் 9  மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். 

ஆனால் ஈரோடு வழியாகவும், ஈரோட்டில் இருந்தும் இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. 


ஈரோட்டில் இருந்து தினமும் காலை திருநெல்வேலிக்கு பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதைப்போல் கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு வழியாக நாகர்கோவிலுக்கு தினமும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் என்பதால் இந்த இரண்டு பாசஞ்சர் ரயில்களில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.கிட்டத்தட்ட 8 முதல் 10 மணி நேரம் ரெயில் பயணம் என்பதால் முதியவர்கள் குழந்தைகள் குடும்பத்துடன் அதிக அளவில் இந்த ரயில்களில் அதிக அளவு பயணம் செய்து வந்தனர். 


திருச்சியில் இருந்து ஈரோடு வழியாக பாலக்காடு, கோவையில் இருந்து ஈரோடு வழியாக சேலம், ஈரோட்டிலிருந்து மேட்டூர் அணை, ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை, ஈரோட்டில் இருந்து திருச்சி போன்ற பகுதிகளுக்கும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த பாசஞ்சர் ரயில்கள்  மீண்டும் இயக்க வேண்டும் என ஈரோடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அரக்கோணம் சேலம் இடையே பாசஞ்சர் ரயில் கடந்த 6-ஆம் தேதி முதல் வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பொது பெட்டிகள் இல்லை. முன்பதிவு பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர்.இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் ஈரோட்டிலும் பாசஞ்சர் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஏழை நடுத்தர மக்கள் பெரும்பாலானோர் ரயில் பயணகளை  தான் விரும்புகின்றனர். தொலைதூர பயணத்திற்கு உடல் சோர்வின்றியும்,  குறைந்த கட்டணத்தில் பயணிக்க  முடியும் என்பதால் எங்களைப் போன்ற நடுத்தர  மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக  ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.பின்னர் சிறப்பு  ரயில்கள் என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயிலும் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

 ஆனால் ஈரோட்டில் இருந்து பாசஞ்சர் ரெயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் நாங்க சிரமத்தில் உள்ளோம். இதனால் உடனடியாக பாசஞ்சர் ரெயில்களை  இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பாசஞ்சர் ரெயில்களை  பொதுஜன பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்கள் பயனடைவார்கள் என்றனர். 


Top