logo
 தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஈரோட்டில்  தர்ணா போராட்டம்

தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஈரோட்டில் தர்ணா போராட்டம்

10/Jan/2021 06:28:24

ஈரோடு, ஜன:    2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஈரோட்டில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடந்த. போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் லூர்துபெலிக்ஸ் ஸ்டீபன் தலைமை வகித்தார்.

 மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக துணை பொதுசெயலாளர் கணேசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி, பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 

இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான 17(ஆ) நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

 தமிழகத்தில் 50ஆண்டுகாலமாக ஆசிரியர்கள் பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்கத்தொகையை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 37, 116 ஆகியவற்றை உடனடியாக திரும்ப பெற வேண்டும். உயர்கல்வி பயில பின்னேற்பு அனுமதி கோரிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்களுக்கு, உடனடியாக ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில்,  மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, மாரிச்சாமி, தேவராஜ், பொருளாளர் தமிழ்செழியன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Top