logo
பிளஸ்- 2, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது குறித்து ஈரோட்டில்  பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

பிளஸ்- 2, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது குறித்து ஈரோட்டில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

06/Jan/2021 10:57:03

ஈரோடு, ஜன: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன .அதன் பின்னர் தொற்று பரவல் குறைந்து வந்ததால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு அறிவித்ததற்கு  பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறியதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வீட்டில் இருந்தவரை பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். 

ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் இறுதி வரை நடைபெறும். இந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாலும் , கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படாததாலும் பொதுத் தேர்வு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடத்தலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள்  திறக்கலாமா? என பெற்றோர்களின் கருத்தை பெற அரசு முடிவு செய்துள்ளது.  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை பொதுத் தேர்விற்கு  தயார்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, புதன்கிழமை முதல் ஈரோடு மாவட்டத்தில் 407 அரசு ,அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் என்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி திறப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது.  முதல் நாள் என்பதால் பெரும்பாலான பள்ளிகளில் ஒரு சில பெற்றோர்களே  வந்திருந்தனர். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் உடன் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

அதன்படி பெற்றோர்கள் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அவர்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.  சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டு இருந்தது அதில் பெற்றோர்கள் நின்று படிவத்தை பூர்த்தி செய்து ஆசிரியர்களிடம்  வழங்கினர். 

பள்ளிகளுக்கு வரமுடியாத பெற்றோர்கள் தபால் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டி ருந்தது. நாளையும், நாளை மறுநாளும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. பெற்றோர்களிடம்  இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் வரும் 9 அல்லது 11 -ஆம் தேதி அறிக்கையாக சென்னை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top