logo
கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில்  சொர்க்கவாசல் திறக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

21/Dec/2020 04:40:55

ஈரோடு, டிச:ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் வரும், 25-ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், சொர்க்கவாசல் திறக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மாறாக காலை, 6 மணிக்கு மேல் பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து மூலவரை வழிபட்டு சொர்க்கவாசல் வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். பகல் பத்து, ராப்பத்து என, 21 நாள் இவ்விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவம் கடந்த 15 -இல் துவங்கியது.

இதனையொட்டி உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் மூலவர் கருவறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். வரும், 24-இல்  மூலவர் மோகினி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா வரும் 25-இல் அதிகாலை 4:45 மணிக்கு நடக்கிறது. 

முன்னதாக அதிகாலை 2:45 மணிக்கு திருமஞ்சனம், மகா தீபராதனை காண்பிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சி நடக்கும். இந்த 10 நாட்களும் மூலவருக்கு மூத்தங்கி சேவையும், ராப்பத்து நிகழ்ச்சியின் முடிவில் நம்மாழ்வார் மோட்சம் அடையும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

பக்தர்களுக்கு கட்டுப்பாடு:வைகுண்ட ஏகாதசி திருவிழா கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நடத்த , திங்கள்கிழமை  மாவட்ட ஆட்சியர்  சி. கதிரவன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுறை,  ஆர்டிஓ சைபுதீன், டிஎஸ்பி ராஜூ தலைமையில் அதிகாரிகள் கோயிலில் ஆய்வு செய்து, விழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினர்

Top