logo
புரெவி புயல் டிச.3 இரவில் கரையைக் கடப்பதால்  தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

புரெவி புயல் டிச.3 இரவில் கரையைக் கடப்பதால் தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

03/Dec/2020 08:51:20

சென்னை:  புரெவி புயல்  டிச-3 –ஆம் தேதி  இரவில் பாம்பனுக்கும், குமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் தென் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த 24-ஆம் தேதி  நிவர் புயல் உருவாகி, மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் வடமாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்தது. இதையடுத்து நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த புயலுக்கு புரெவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. டிசம்பர் 3–ஆம் தேதி  இரவு பாம்பன் – குமரி இடையே புரெவி புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.95 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தற்போது மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

2 நாட்களுக்கு கனமழை: புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். வட தமிழகத்தில் 3-ம் தேதி ஒரு சில இடங்களில் மழை பெய்யும். குமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று  காலை முதல் ராமேஸ்வரம் தீவு பகுதியில் வீசி வரும் தொடர் சூறைக்காற்றால் கடல் கடுமையான சீற்றம் ஏற்பட்டு கொந்தளிப்புடன் காணப்படுகிறன. ராமேஸ்வரம் சேராங்கொட்டை கடற்கரை ஓரத்தில் உள்ள சிமெண்ட் சாலை கடல் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. மேலும், அரிச்சல் முனையிலுள்ள காவல் மையம் கடல் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனையடுத்து, தனுஷ்கோடி எம்.ஆர் சத்திரம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் மீனவ மக்கள் வருவாய்த் துறையினர் மற்றும் மெரைன் போலீசார் தனியார் பேருந்து மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

மீனவர்களுக்கு தடை: புயல் வலுப்பெற்று காற்றின் வேகம் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலே அதிகரித்து வருவதால் தீவு பகுதியில் பேரிடர் சிறப்பு மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, சோளியக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா். ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களையும் தொடர்பு கொண்டு கரைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் தங்கள் படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

 கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள் மற்றும் கட்டுமரங்கள். புயல் எச்சரிக்கையை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4,300 நாட்டுப்படகுகள், 423 விசைப்படகுகள் மற்றும் 8 கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.மேலும் வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் குறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு புயல், கனமழை பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இங்கும் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் கனமழை காரணமாக யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகம் செய்யப்படுகிறது. குவியல் குவியலாக உப்பு குவித்து வைத்திருக் கிறார்கள். இப்போது மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் உப்பை பாதுகாக்க தார் பாய் போட்டு மூடி வருகிறார்கள். இதுதவிர உப்பை மூட்டை மூட்டையாக போட்டு எடுத்து செல்கிறார்கள். காரைக்கால் மாவட்டத்துக்கு  மாவட்ட நிர்வாகத்தால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Top