logo
ஈரோடு திருநகர் காலனி  நடைபெற்ற சிறப்பு   மனுநீதி முகாமில் 73 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

ஈரோடு திருநகர் காலனி நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாமில் 73 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

01/Dec/2020 10:58:18

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட, கருங்கல்பாளையம், திருநகர் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று  பொதுமக்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம்,கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தலைமையில், மனுநீதி திட்ட முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 190 கோரிக்கை மனுக்களை பெற்று, தொடர்புடைய அலுவலர்களிடம் பிரித்து வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன்  தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர்; ஏழை, எளியோர், மகளிர், முதியோர், கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். 

அதன்படி, 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு பயின்ற ஏழை, எளிய மகளிருக்கு 8 கிராம் தாலிக்கு தங்கத்துடன், திருமண உதவித்தொகையும், கர்ப்பிணி பெண்களுக்கு பாராமரிப்பு உதவித்தொகையும், பிறந்த குழந்தைக்கு அம்மா பரிசு பெட்டகம், தாய்மார்களுக்கு மகப்பேறு சஞ்சீவினி மூலிகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. 2 பெண் குழந்தைகள் இருந்தால் அக்குழந்தைகளின் பெயரில் தலா ரூ.1 இலட்சம் வைப்பு நிதி பத்திரம் வழங்கப்பட்டு, அவர்களுக்கு 18 வயது நிரம்பியவுடன் அத்தொகை வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என்றால் அரசு அலுவலகங்களை தேடி செல்ல வேண்டும். அந்நிலையை மாற்றி தற்பொழுது மக்களை தேடி அலுவலர்கள் செல்லும் நிலையை உருவாக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் மனுநீதி திட்ட முகாமானது நடத்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்கும் அரசாக  தமிழக  அரசு திகழ்கிறது. இம்முகாமில் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 மேலும் இம்முகாம்களில் அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறும் வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு  ரூ.700 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இம்முகாமில், சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.2,40,000ஃ- மதிப்பீட்டில் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 26 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், முதியோர் உதவித்தொகை பெறும் 27 முதியவர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை திட்டத்தில் வேட்டி, சேலைகளையும் என 73 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்முகாமில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் எஸ்.சைபுதீன்,   வட்டாட்சியர்கள் மதி.மாலதி, அ.பரிமளாதேவி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


Top