logo
பேரிடர் காலங்களில் அரசின் வழிமுறைகளை பொது மக்கள் தவறாது  பின்பற்ற வேண்டும்: ஷம்புகல்லோலிக்கர் தகவல்

பேரிடர் காலங்களில் அரசின் வழிமுறைகளை பொது மக்கள் தவறாது பின்பற்ற வேண்டும்: ஷம்புகல்லோலிக்கர் தகவல்

25/Nov/2020 03:58:10

புதுக்கோட்டை:  புயல் பேரிடர் காலங்களில் அரசின் வழிமுறைகளை பொது மக்கள் தவறாது  பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்புகல்லோலிக்கர்.

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி புயல் பாதுகாப்பு மையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிக்கர் கள் இன்று (25.11.2020) நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர்  அவர் கூறியதாவது:

 நிவர் புயல் பாதிப்பிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் கட்டுமாவடி புயல் பாதுகாப்பு மையம் மற்றும் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகள் நேரில்  ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ள பொது மக்களிடம் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. அரசு சார்பில் தேவையான அனைத்து வசதிகளும் சிறந்த முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர். மேலும் இம்மையத்தில் தங்கியுள்ள பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும்  செய்யப்பட்டுள்ளது. 

பொது மக்களுக்கு புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தாழ்வு பகுதிகள் கண்டறியப்பட்டு அதன் அருகிலேயே பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைத்து பராமரிக்க 371 பள்ளிக் கட்டடங்கள், 116 புயல் பாதுகாப்பு மையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி போன்ற கடலோர பகுதிகளில் 5,000 முதல் 7,000 வரையிலான பொது மக்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தற்பொழுது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப  கூடுதல் வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் பேரிடர் காலங்களில் அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பொது மக்கள் அனைவரும் தவறாது பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிக்கர் தெரிவித்தார்.

 இந்த ஆய்வில் அறந்தாங்கி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் ஆனந்த் மோகன், துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சுகிதா உள்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Top