logo
நிவர் புயல் அச்சுறுத்தல்: புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் விளக்குகள் கீழே இறக்கப்பட்டன

நிவர் புயல் அச்சுறுத்தல்: புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் விளக்குகள் கீழே இறக்கப்பட்டன

24/Nov/2020 07:00:01

 புதுக்கோட்டை: நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக  இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது .

நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் என்றும் அதன் காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்று மற்றும் மழை அதிகளவில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .இதன் தொடர்ச்சியாக 7 மாவட்டங்களில் அரசு உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த கஜா புயலின் போது புதுக்கோட்டையில் மரங்களும் உயர்மின் கோபுர விளக்குகளும் சாய்ந்து பெரும் சேதம் அடைந்தன . இதனை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தென்னை மரங்களில் உள்ள மட்டைகளை வெட்டி மரங்களை பாதுகாத்து வருகின்றனர். அதேபோல் வீடுகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டியும்  வீட்டின் மேற்கூரையில் கனமான தார்பாய்களை விதித்தும் பொதுமக்கள் பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சி சார்பில் நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கம்பங்களில் இருந்து விளக்குகளை கீழே இறக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதிக்குச் செல்ல தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது . 

அதே போல் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள குளங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் மேலும் நீர் நிரம்பினால் தண்ணீர் வெளியேற வடிகால் பகுதிகளை ஜேசிபி எந்திரங்களைக் கொண்டு சீரமைக்கும் பணிகளிலும்நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் .

 மேலும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மெழுகுவர்த்தி போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் மின் வயர்கள் அறுந்து கிடந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது . அரசு நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளை கண்டு பொதுமக்கள் மேலும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் 


Top