logo
ஈரோடு மாவட்டத்தில் 5-வது நாளாக தினசரி பாதிப்பு குறைவு -மாவட்டத்தில் தினமும் 2 ஆயிரம் கொரோனா  பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் 5-வது நாளாக தினசரி பாதிப்பு குறைவு -மாவட்டத்தில் தினமும் 2 ஆயிரம் கொரோனா பரிசோதனை

19/Nov/2020 07:05:12

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா  வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. முதலில் மாநகராட்சி பகுதியில் வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது .பின்னர் மாவட்டம் முழுவதும் வேகமாக பரவியது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

இடத்தில் மாவட்டத்தில் வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், சுகாதார துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.  காய்ச்சல் சிறப்பு முகாம், மாவட்டம் முழுவதும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைத்தல் போன்றவை காரணமாக மாவட்டத்தில் வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது.  மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வைரஸால் பார்த்தவர்கள் எண்ணிக்கை காட்டிலும் குணமடைந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் வைரஸ் தினசரி  பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதனால் மாவட்டத்தில் வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 746 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் வைரஸ் பாதிப்பிலிருந்து 102 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  இதனால் குணமடைந்தோர்  எண்ணிக்கை 11,152 ஆக உயர்ந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் 458 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வைரசால் பாதித்தவர்களின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

  முதலில் இருந்தே மாவட்டத்தில் தினமும் 2 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் நோயாளிகள் விரைவாக குணம் அடைந்தனர். 

அதைப்போல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றவர்களும் ஒரு வாரத்தில் குணம் அடைந்துள்ளனர். தற்போது மக்களிடம் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடத் தொடங்கி உள்ளனர்.

தற்போதும் தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா  பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது என்று மக்கள் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். அரசு வலியுறுத்தி வரும் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவேளையை கடைப்பிடிக்க வேண்டும் என்றார். 


Top