logo
நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் குறைப்பு

நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் குறைப்பு

18/Nov/2020 10:10:56

ஈரோடு: ஈரோடு ,கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் விளை நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 அணையில் இருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி -அரக்கன்கோட்டை மற்றும் கீழ்பவானி வாய்க்காலுக்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. நீர் வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.இதுவரை பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 3100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 1600 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 95.58 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2604 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆயிரத்து 1500 கன அடியும் என மொத்தம் ஆயிரத்து 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை நிரம்பி வருகிறது.குண்டேரிப்பள்ளம் 36 அடியாக உள்ளது. அணைக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. வரட்டு பள்ளம் - 29.59 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் 14.10அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


Top