logo
ஈரோடு மாவட்டம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை: கொடுமுடியில் அதிகபட்சமாக 61 மி.மீ.பதிவு

ஈரோடு மாவட்டம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை: கொடுமுடியில் அதிகபட்சமாக 61 மி.மீ.பதிவு

17/Nov/2020 08:41:00

ஈரோடு: வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே பெய்து வருகிறது.ஈரோடு மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகவே சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில்  மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மதியம் தொடங்கி இரவு முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி வனப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கொடுமுடி கொள்ள நல்லி,  ஊஞ்சலூர் நல்லாம்பாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.மொடக்குறிச்சி அவல்பூந்துறை சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் 3 மணி முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.

பவானி சித்தோடு காலிங்கராயன்பாளையம் அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் மாலை முதல் இரவு வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து  கொண்டிருந்தது. சத்தியமங்கலம் வடவள்ளி, பண்ணாரி ,ஓட்டை குட்டை,  ராஜன் நகர், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது இதேபோல் கோபி தாளவாடி நம்பியூரில் பலத்த மழை பெய்துள்ளது.

 ஈரோடு மாநகர் பொருத்தவரை நேற்று மதியம் தொடங்கிய மழை இரவு வரை பெய்து கொண்டே இருந்தது. இவ்வாறு நேற்று ஒருநாள் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. இந்த மலையில் பெரியளவு சேதங்கள் இல்லாவிட்டாலும் தொடர்ந்து தூறி கொண்டே இருப்பதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. அந்தியூர்  பூக்கடை கார்னரில்  இருந்து ஆப்பக்கூடல் செல்லும் வழியில் தாழ்வான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் இந்த பகுதியை கடக்க மிகவும் சிரமப்பட்டனர்.

எனவே சாக்கடை கால்வாய் வடிகாலை சுத்தப்படுத்தி தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைப்போல் கொடிவேரி, குண்டேரிப்பள்ளம் வரட்டுப்பள்ளம் அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு( மில்லி மீட்டரில்): கொடுமுடி - 61, கவுந்தப்பாடி - 56.8, ஈரோடு -44, பவானி -43, குண்டேரிபள்ளம் - 32.2, வரட்டுப்பள்ளம் - 32.2, அம்மாபேட்டை - 29.4, கோபி - 27.4, கொடிவேரி - 25.2, நம்பியூர் - 25, பவானிசாகர் - 18.4, சத்தியமங்கலம் - 18, மொடக்குறிச்சி - 17, சென்னிமலை - 15, பெருந்துறை - 14, தாளவாடி - 6.6. 


Top