logo
குழந்தைகள் தொடர்பான புகார்களுக்கு 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்: புதுகை மாவட்ட ஆட்சியர்

குழந்தைகள் தொடர்பான புகார்களுக்கு 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்: புதுகை மாவட்ட ஆட்சியர்

14/Nov/2020 07:41:45

புதுக்கோட்டை: குழந்தைகள் வார விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை சைல்டு லைன் சார்பில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரிக்கு (13.11.2020) பள்ளி மாணவர்கள் ரக்ஷபந்தன்(ராக்கி) கட்டி வாழ்த்தினர்.

பின்னர், மாவட்ட ஆட்சியர்  கூறியதாவது: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 -ஆம் நாள் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய குழந்தைகள் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை சைல்டு லைன் மூலம் 13.11.2020 முதல் 19.11.2020 வரை குழந்தைகள் வார விழா கொண்டாடப்பட உள்ளது. 

இதன் ஒரு பகுதியாக முதல் நாள் நிகழ்வான இன்று பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் ரக்ஷாபந்தன் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  குழந்தைகள் வார விழாவின் தொடர்ச்சியாக குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்துதல், உள்ளூர்  கேபிள் தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு  குறும்படங்கள் ஒளிபரப்புதல், குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் குழந்தை தொழிலாளா; ஒழிப்பு குறித்து பயிற்சி அளித்தல், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், பள்ளிகளில் பேச்சு போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழந்தைகள் பாதுகாப்பு, தெருவோரக் குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள், குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் போன்ற குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு புகார்களுக்கு சைல்டு லைனின் கட்டணமில்லா 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

 எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும் என்றார் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி.

இதில்,புதுக்கோட்டை சைல்டு லைன் இயக்குநர் அருள்திரு.ஜேம்ஸ்ராஜ், நிர்வாக அலுவலர் மத்தியாஸ் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

Top