logo
இட ஒதுக்கீட்டு முறையில்  வாய்ப்புகள் குறைவாகப் பெறுவது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற  சமூகங்கள் தான்: கொமதேக கருத்து

இட ஒதுக்கீட்டு முறையில் வாய்ப்புகள் குறைவாகப் பெறுவது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமூகங்கள் தான்: கொமதேக கருத்து

29/Oct/2020 12:05:43

சென்னை: கொங்கு நாடு   மக்கள் தேசியகட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: இன்று தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீட்டு முறையில் 20 சதவீதம் இருக்கின்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது. 18 சதவீதம் இருக்கின்ற பட்டியலின மற்றும் மலைவாழ் மக்களுக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமுதாயங்களை சார்ந்த 60 சதவீத மக்களுக்கு 26.5 சதவீத இட ஒதுக்கீடு தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மேற்படிப்பு இட ஒதுக்கீடாக இருந்தாலும், அரசு வேலைவாய்ப்புகளாக இருந்தாலும் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த   சமுதாய மக்கள் தான். 

ஆரம்ப காலங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இருந்த வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு காலகட்டங்களில் பறிக்கப்பட்டது. இதைப்பற்றிய விழிப்புணர்வும் தங்களுக்குள் ஒற்றுமையும் இல்லாத காரணத்தினால் பிற்படுத்தப்பட்ட பிரிவை  சார்ந்த சமுதாய மக்களுடைய உரிமைகளுக்காக தமிழகத்தில் கோரிக்கைகள் வலுவாக வைக்கப்படவில்லை.

 பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமுதாயங்கள் எல்லாம் ஒன்றுபட்டு தங்களுடைய உரிமைகளுக்காக போராடவில்லை என்றால் இன்னும் 10 ஆண்டுகள் கடந்தால் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கின்ற சமுதாயத்தை சார்ந்தவர்கள் யாரும் காவல்துறை அதிகாரிகளாகவோ அல்லது அரசு அலுவலர்களாகவோ இருக்க மாட்டார்கள்.

 நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் அதிகமாக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற காரணத்தினால் இந்த பிரிவை சார்ந்த இளைய சமுதாயம் நல்லதொரு எதிர்காலத்தை பெற முடியாமல் தவிக்கிறது. அரசு வேலைகளில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தனியார் வேலைகளுக்காகவும், வெளிநாட்டு வேலைகளுக்காகவும் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

 சமூக நீதி என்பது அனைத்து பிரிவினருக்கும் வாய்ப்புகள் சமமாக கிடைப்பதாக இருக்க வேண்டும். தமிழக அரசு உண்மை நிலையை புரிந்துகொண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 


Top