logo
 மக்களைத் துரத்தும் மஞ்சள் பிசாசு- முனைவர் ந.முருகேசபாண்டியன்

மக்களைத் துரத்தும் மஞ்சள் பிசாசு- முனைவர் ந.முருகேசபாண்டியன்

27/Oct/2020 12:55:12

தங்கம் என்ற சொல் புதிர்த்தன்மை மிக்கது. பூமிக்குள் இயற்கையாகப் பொதிந்திருக்கும் உலோகத்தினைத் தோண்டியெடுத்து அதற்குத் தங்கம் எனப் பெயர் சூட்டி, அதை அடைவதற்காக மனிதர்கள் படுகின்ற பாடுகளுக்கு அளவேது என்று.  யோசிக்கும் வேளையில் இரும்புக்கும் தங்கத்திற்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. என்றாலும் மனிதகுல வரலாறு முழுக்க ஏதோ ஒருவகையில் தங்கம் என்ற உலோகத்துடன் சம்பந்தப்பட்டிருப்பது விநோதம்தான்.

அக்ஷ்ய திரிதியை நாளில் ஒரு கிராம் தங்கம் வாங்கினால் வாழ்க்கை வளமடைந்து விடும் என நகைக்கடைகளின் முன்னர் கூடுகின்றவர்களின் நம்பிக்கையை என்னவென்று சொல்ல? பொதுவாகத் தங்கம் வாங்கிச் சேர்ப்பது வளமான வாழ்விற்கு ஆதாரம், சமூக மதிப்பு என்ற நிலையில் பலரும் தங்கத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

நெல்,கோதுமை போன்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது, தங்கம் மனித வாழ்க்கைக்கு ஆதாரமான பொருள் அல்ல. இந்த சாதாரண உண்மை எல்லோருக்கும் தெரிந்தது என்றாலும், தங்கம் என்ற மஞ்சள் உலோகம்  பொருளாதார ரீதியில் ஆளுகை செலுத்துகின்றது.

தங்கம், உலோகம் என்ற நிலையிலிருந்து மாறி மக்களின் அன்றாட வாழ்வில் உன்னத இடம் பெற்றுள்ளது. தாய் தன்னுடைய குழந்தையின்மீது ப்ரியத்தை வெளிப்படுத்த தங்கமே என்கிறார். இளம்பெண்ணின் அழகினை உயர்வாக வர்ணிக்க தங்கச்சிலை போன்ற அழகு என்று சொல்வது வழக்கினில் உள்ளது. மேன்மையான குணமுடையவர் என்பதைக் குறிக்க` ஆள் தங்கமானவர்`என்றும் நேர்மையானவர் என்பதைக் குறிக்க சொக்கத்தங்கம் என்றும் சொல்வது தங்கம்மீது சுமத்தப்பட்டுள்ள அர்த்தச்சுமைகள்.

வெறுமனே மஞ்சளாக மின்னும் உலோகமான தங்கம் சமூகரீதியிலும் மேலாதிக்கம் பெற்றுள்ளது. பூமிக்குள் இருந்து கிடைக்கும் எரிபொருளான பெட்ரோலுடன் ஒப்பீடும்போது தங்கத்தின் பயன்பாடு மிகவும் அற்பமானது. என்றாலும் வரலாறு முழுக்க தங்கம் அதிகாரத்துடன் நெருக்கமாகி பொருளாதார ரீதியில் உலகையே ஆட்டிப் படைக்கின்றது. தனிமனித நிலையில் ஒவ்வொருவரையும் கனவுலகில் ஆழ்த்துகின்ற மஞ்சள் பிசாசு, பலரையும் தனது காலடியில் மண்டியிட வைக்கின்றது.

உலோகம் என்ற நிலையில்  தங்கம் அடர்த்தியான மஞ்சள் வண்ணம் காரணமாக ஒளிர்கின்றது. அது இரும்பினைப் போலத் துருப்பிடிப்பது இல்லை: செம்பினைப் போலப் பச்சைக்களிம்பு படர்வதில்லை. எப்படியோ தங்கத்தின் பிரகாசத்தில் ஒருவிதமான மாயத்தன்மை கசிந்து கொண்டிருக்கின்றது. அதனுடைய வசீகரிக்கும்  மஞ்சள் ஒளியினால் ஈர்க்கப்பட்ட மனிதர்கள் காலந்தோறும் தங்கவேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மஞ்சள் பிசாசினைக் கட்டித் தழுவிட மக்கள் விழைவது,  பொருளாதாரரீதியில்  தங்கத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சமூகமதிப்புதான் காரணம். 

வேதகால இந்தியாவில் பழக்கத்திலிருந்த தங்க நாணயத்தின் பெயர் கிஷ்கம். யாகம் வளர்க்கும் பிராமணர்களுக்குத் தட்சணையாகத் தங்கம் தர வேண்டும்  என வேதம் வரையறுத்துள்ளது. சங்க இலக்கியத்தில் பொன் பற்றிய குறிப்பானது பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. நற்றிணையில்  குறிப்பிடப்பட்டுள்ள `பொன்செய் கொல்லன்` என்பது தங்கநகை செய்யும் ஆசாரியையே குறிக்கின்றது. கி.பி.2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிலப்பதிகாரம் காப்பியத்தில் கண்ணகியை மாசறு பொன்னே என வருணிக்கும் கோவலன் இறுதியில் கொல்லப்படுவதற்குப் பொன்னாலான சிலம்பு காரணமாக உள்ளது. கிரேக்கப் பழங்கதையில் வரும் தொட்டதை எல்லாம் பொன்னாக்கும் வரம் பெற்ற மைதாஸின் கதை, தங்கம் பற்றிய எதிர்மறைச் சிந்தனையின் வெளிப்பாடு.

சித்தர்கள் ரசவாதம்மூலம் இரும்பினைத் தங்கமாக்கும் வித்தையை அறிந்திருந்தனர் என்று நம்பி, போலியான ஆட்கள் பின்னால் அலைந்து சொத்தை இழந்து பித்துப்பிடித்து அலைந்தவர்கள் தமிழகத்தில் உண்டு. உலக வரலாறு என்பது ஒருபுறம் நாடுகளைக் கைப்பற்றுவதற்கான போர்களில் இருந்து தொடங்குகின்றது. இன்னொருபுறம் தங்கத்தைக் கொள்ளையடிப்பதற்காக நடைபெற்ற போர்கள்.

பண்டைய  இந்தியாவில் கோவில்களில் தங்க விக்கிரங்களாகவும், அவற்றுக்கு அணிவிக்கப்படும் தங்கநகைகளாகவும் சேர்த்து வைக்கப்பட்டிருந்த விலை மதிப்பற்ற பொருட்கள்தான் வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களைக் கவர்ந்திழுத்தன. கஜினிமுகமது இந்தியாவிற்குள் பதினேழு முறை படையெடுத்து வந்தது தங்கத்தைச் சூறையாடுவற்குதான். 

ஐரோப்பியர்கள் கி.பி.16-ஆம் நூற்றாண்டில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயண மானதற்கு முக்கியக் காரணம் தங்கவேட்டைதான். இன்றளவும் ஆப்பிரிக்காவிலுள்ள தங்கச்சுரங்கங்களில் அதிகாரப் போட்டி தொடர்கின்றது. அமெரிக்காவின் கையிருப்பில் மட்டும் 1980-ஆம் ஆண்டில் 24,542 டன்கள் தங்கம் இருந்தது. டாலரின் மதிப்பு சர்வதேச ரீதியில் உயர்வாக இருந்தமைக்குக் காரணம் தங்கத்தின் சேமிப்புதான். வல்லரசு நாடாக இன்று அமெரிக்கா செய்யும் அடாவடி அரசியலதிகாரத்திற்குப் பின்புலமாகத் தங்கம் உள்ளது.

தங்கத்தைச் சொந்தம் கொண்டாடுவதற்கான போட்டியில் கொல்லப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கைக்கு அளவேது? வரலாறு முழுக்க சிந்தப்பட்ட  மனித ரத்தத்தில் தங்கத்தின் வாசனை உள்ளது. மஞ்சள் உலோகத்திற்காக ஒருவரையொருவர் கொன்று குவித்தது ,தங்கத்தின் வரலாற்றைச் சொல்வதாகும்.  ஒருவகையில் மஞ்சள் பிசாசு மக்களைப் பேராசைக்காரர்களாக மாற்றுகின்றது: கஞ்சர்களாக்குகிறது: ஈவிரக்கமற்றவர்களாக் குகிறது. அடிப்படையில் வேதியியல் பண்புகளைக் கொண்ட மூலகமான தங்கத்தைச் செல்வத்திற்கான ஆதாரமாக்கியது சமூக அமைப்புதான்.

வளமான வாழ்க்கைக்கு அடையாளமாக விளங்கும் தங்கம் இன்றைய சமூகத்தின் மீது செலுத்தும் அதிகாரம் குறித்துக் கேள்விகள் தோன்றுகின்றன. மனித வாழ்க்கைக்கு ஆதாரமான உணவு, உடை, இல்லம் போன்றவற்றுக்கும் தங்கதிற்கும் தொடர்பு எதுவுமில்லை. மனிதர்களுடைய மேனாமினுக்கு, பகட்டு. ஆடம்பரம் போன்ற இரண்டாம்நிலைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தங்கத்திற்கு நிகர் எதுவுமில்லை.

 தங்கத்தின் விலை மதிப்பு புதிர்த்தன்மை மிக்கது. 1926-ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2/-. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,800- தங்கத்தின் விலை நாள்தோறும் ஏறிக்கொண்டே போனாலும் தங்கநகையின் மீதான  மோகம் இந்தியாவில் குறையவில்லை. இளம்பெண்ணின் எதிர்காலம் அதாவது அவளுடைய திருமணம் தங்கத்துடன்   சம்பந்தப்பட்டிருப்பது பிரச்சினையை அதிகப்படுத்துகின்றது. இத்தகு சூழலில் தங்கமயமான எதிர்காலம் என்பதே தங்கத்துடன் தொடர்புடையதாக இருப்பது வேடிக்கையாக உள்ளது.

காரல் மார்க்ஸ் தங்கத்தினை மஞ்சள் பிசாசு என வருணித்தது பொருத்தமானது. மனிதர்களை மயக்கும் மஞ்சள் பிசாசு ஏற்படுத்தியுள்ள புனைவுகளும் விநோதங்களும் முடிவற்றுப் பொங்கி வழிகின்றன. மனிதர்களை அதிகாரம் செய்யும் மஞ்சள் பிசாசு இடைவிடாமல் துரத்துகின்றது. தப்பித்தல் சாத்தியமா?


Top