logo
 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மறுப்புக்கு உச்சநீதிமன்றம் காரணமல்ல..  மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்: கொமதேக குற்றச்சாட்டு

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மறுப்புக்கு உச்சநீதிமன்றம் காரணமல்ல.. மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்: கொமதேக குற்றச்சாட்டு

26/Oct/2020 09:11:21

சென்னை: மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 50 சதவீத இட ஒதுக்கீட்டை மறுத்து தீர்ப்பளித்து இருப்பது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதாக கொங்குநாடுமக்கள் தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து, அக்கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மறுப்புக்கு உச்சநீதிமன்றம் காரணமல்ல, மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்.  இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்று மத்திய, மாநில அரசுகள் வேஷம் போடலாம். ஆனால், மத்திய அரசு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் வாதங்களை வைத்து இருக்கிறது. உச்சநீதிமன்றம் நம்பி எதிர் தீர்ப்பளிக்கும் அளவிற்கு பொய்யான ஆதாரங்களை அளித்திருக்கிறது. 

மாநில அரசு 50 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான முனைப்பை தனது வாதத்தில் காட்டாமல் போனதும் இதற்கு காரணம். மத்திய, மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருக்கும் போது மற்ற கட்சிகளுடைய வாதங்கள் எடுபட வாய்ப்பில்லை. மாணவர்களுடைய வயிற்றில் இந்த ஆண்டு அடித்த மத்திய அரசையும், அதற்கு துணை போன மாநில அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

 மருத்துவ கல்வி இட ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசு நமக்கு எதிராக இருக்கிறது. மாநில ஆளுநரும் எதிராக இருக்கிறார். இதுவெல்லாம் மாநிலத்தில் ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு உரிய மரியாதை மத்திய பாஜக தலைவர்களிடத்தில் இல்லை என்பதுதான் காரணம். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆளுநருடைய முடிவு வராமல் கலந்தாய்வு நடத்த மாட்டோம் என்று அறிவித்தது போல 50 சதவீத இட ஒதுக்கீட்டில் மத்திய அரசை பணிய வைக்க தமிழக அரசு கடுமையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 மொத்தத்தில் நீட் தேர்வு ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவர்கள் கல்லூரி சேர்க்கை முடியும்வரை ஒருவிதமான குழப்பத்திலேயே வைக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டும் ஒரு முடிவு இல்லாமல் இது தொடர்ந்து கொண்டே இருப்பதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாநில அரசின் அதிவேக நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Top