logo
ஒருங்கிணைந்த முதுநிலை பட்டியல் வெளியிடக்கோரி தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர்  4 ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

ஒருங்கிணைந்த முதுநிலை பட்டியல் வெளியிடக்கோரி தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 4 ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

26/Oct/2020 06:29:51

புதுக்கோட்டை:   இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை பட்டியலை வெளியிட வலியுறுத்தி தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை (23.10.2020) தொடங்கிய காத்திருப்பு போராட்டம் நான்காவது நாளாக இன்றும்(அக்.26) தொடர்ந்தது.


கோரிக்கைகள்: புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகின் அரசாணை (எண்-106-1.9.2020) மற்றும் வருவாய் ஆணையர் சுற்றறிக்கை 5.9.2020 -இன் படி நேரடி நியமன உதவியாளர்கள் மற்றும் பதவி உயர்வு உதவியாளர்களுக்கு இடையே பணிமுதுநிலைப்பட்டியல் 7.10.2020 அன்று  மாவட்ட வருவாய் அலுவலரால் வெளியிடப்பட்டது.


இந்நிலையில், மேற்கண்ட உத்தரவுகளில் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று நிர்வாக நலனுக்கு எதிராகவும் பணியாளர் நலனை கருத்தில் கொள்ளாமலும் ஒரு சிலர் நீதிமன்றத்தை நாடி தடையுத்தரவு பெற முயற்சித்து வருகின்றனர்.2017, 2018, 2019 மற்றும் 2020  ஆகிய 4 ஆண்டுகள் நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிடப்படாத நிலையில், அதற்கு காரணமானவர்கள் தற்போது வெளியிடப்பட்ட முதுநிலையைப் பின்பற்றி நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிடக்கூடாது என மாற்று சங்கத்தினரில் ஒரு சில நபர்கள் தெரிவித்து நீதிமன்றத்தில் இல்லாத உத்தரவுக்காக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞரிடம் வழக்கின் நிலைபற்றி கேட்பது இதுவரை நிர்வாக நடைமுறையில் இல்லாத ஒன்றாகும்.

 தொடர்ந்து 4 ஆண்டுகளாக சில தனி நபர்களுக்கு  ஆதரவாகவே மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. கடந்த 1.11.2019-அன்று வெளியிடப்பட்ட  தற்காலிக துணை வட்டாட்சியர் பட்டியல் தனி நபர்களுக்கு ஆதரவாக நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட தவறான உத்தரவு ஒன்றே இதற்கு சான்றாகும். எதிர்தரப்பினரால் நீதிமன்றத்தில்  தடையுத்தரவு பெற வாய்ப்புள்ளது என்றும் அதற்கு முன்பாக நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிட வேண்டுமென்றும் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், கோப்பினை பரிசீலனை கூடச்செய்யாமல் காலம் தாழ்த்துவது மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற தடையுத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறது என்றே பொருளாகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த ஒருதலைப்பட்சமான நடுநிலையற்ற நடவடிக்கைகளால் இளநிலை உதவியாளர் முதல் வட்டாட்சியர் நிலை வரை பணியாளர்களுக்கு பல்வேறு இன்னல்களும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.மேலும், மாற்று சங்கத்தினரால் சென்னை உயர்நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தடையுத்தரவு உள்ளது என நிர்வாகத்துக்கு தவறான தகவல் அளித்த நபர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் 2014 வரை பணியில் சேர்ந்த இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை பட்டியல் தயார் செய்யப்பட்டு ஏற்பளிக்கப்பட்டு நாளது தேதி வரை வெளியிடப்படாமல் உள்ளது. எனவே, அந்தப்ட்டியலை உடனடியாக மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும்.

இப்பிரச்னையில்,  மாவட்ட நிர்வாகத்தின் ஒரு தலைப்பட்சமான செயல்பாட்டினைக் கண்டித்தும் நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியலை உடனடியாக வெளியிடக் கோரியும் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டி ருந்தது. 

அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் அக்.23-இல் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் நான்காவது நாளாக திங்கள்கிழமை இரவிலும் (26.10.2020)   தொடர்ந்து நடைபெற்றது. இதில், திரளான சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Top