logo
திருமாவளவனுக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி: பாஜக விடுதலை சிறுத்தைகள் மோதல்- போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு

திருமாவளவனுக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி: பாஜக விடுதலை சிறுத்தைகள் மோதல்- போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு

26/Oct/2020 05:41:28

ஈரோடு: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பெண்களை பற்றி இழிவாக பேசியதாக  அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா மகளிரணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அடுத்து பேட்டையில்  இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  வருவதாக இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் ஏராளமான இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கருப்புக் கொடியுடன்  திரண்டிருந்தனர்  தகவலறிந்த டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் போலீஸார் அப்பகுதிக்குச்சென்று  சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, திருமாவளவனின் வாகன் வந்தபோது அங்கு திரண்டிருந்த பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் அவருக்கு எதிராக முழக்கமிட்டு கருப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதையடுத்து, திருமாவளவனின் வாகனம்  விழா நடக்கும் இடத்திற்கு சென்று விட்டது.

இந்நிலையில், பாஜகவினரைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் முழக்கமிட்டனர். இதற்கு எதிராக பாஜக, இந்து முன்னணியினரும் முழக்கமிட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே  இருதரப்பிலிருந்தும் கற்களை வீசியதால், போலீஸ் வாகனம் சேதமடைந்தது. மேலும் இரண்டு 2 வாகனங்களின் கண்ணாடிகளும் சேதமடைந்தன. 

இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.இதையடுத்து பாரதிய ஜனதா, விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்களை  போலீஸார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தனித்தனியாக தங்க வைத்தனர். அங்கு பதற்றம் நீடிப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


Top