logo
ஈரோடு ஊராட்சிகோட்டை குடிநீர்த் திட்டப்பணிகளை முதல்வர் விரைவில் தொடக்கி வைப்பார்:  மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் தகவல்

ஈரோடு ஊராட்சிகோட்டை குடிநீர்த் திட்டப்பணிகளை முதல்வர் விரைவில் தொடக்கி வைப்பார்: மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் தகவல்

24/Oct/2020 01:45:57

ஈரோடு மாநகரில் நடைபெற்றுவரும் ரூ.500 கோடி மதிப்பிலான ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. எனவே அடுத்த மாதம் முதலமைச்சர் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார் என்று ஈரோடு மாநகர் அதிமுக மாவட்ட செயலாளர்,முன்னாள் அமைச்சர் மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான கே.வி. ராமலிங்கம் தெரிவித்தார்.

ஈரோடு மாணிக்கம் பாளையம் பகுதியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் தென்னரசு எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடையை அவர் திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி சார்பில் ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஈரோடு மாநகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தினசரி குடிநீர் வழங்கும் வகையில் பவானி அடுத்த ஊராட்சிக்கோட்டை பகுதியிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொண்டுவர அரசு திட்டமிட்டது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது இந்த திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இத்திட்டத்தின் கீழ், சுமார் 1.90 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டது. தற்போது இதுவரை 1.05 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன .இதற்காக தற்போது குடிநீர் பம்ப் செய்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு சூரியம்பாளையம் மற்றும் இதரபகுதிகளில்  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் புதிதாக கட்டப்பட்ட அனைத்து பணிகளும் விரைவு படுத்தப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன் தொடங்கிய கொரானா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்துக்கு சென்று விட்டதால் பணியில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அன்றாட வாழ்க்கை  சகஜ நிலைக்கு திரும்பி வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பி வந்துள்ளனர். எனவே அனைத்து பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இதேபோன்று ஈரோடு வெளிவட்ட சாலை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. 

கொக்கராயன் பேட்டை பகுதியில் இருந்து ரங்கம்பாளையம் சென்னிமலை ரோடு வழியாக ஈரோடு திண்டல் மேடு பகுதியில் பெருந்துறை சாலை உடன் இந்த வெளிவட்ட சாலை இணையும். கரூர் சாலை சென்னிமலை ஈரோடு பூந்துறை சாலை மற்றும் பெருந்துறை சாலை ஆகியவை  இந்த வெளிவட்ட சாலையில் இணைக்கப்படுவதால் ஈரோடு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும். 

கொக்கராயன்பேட்டை படகுத் துறையிலிருந்து நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் இந்த சாலை நாமக்கல் மாவட்டத்திற்கு எளிதாக போக்குவரத்து  நடைபெற பெரிதும் உதவும். தென்மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக கோவைக்கு செல்வதற்கு இந்த சாலை வழியாக பெருந்துறை சாலை அடையலாம். இதேபோன்று ,பெருந்துறை சாலையில் இருந்து வருபவர்கள் தென் மாவட்டத்திற்கு ஈரோடு நகரில் நுழையாமல் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். 

இதனால் கனரக வாகனங்கள் பெரிதும் இந்த வெளிவட்ட சாலை வழியாக செல்லும் போது போக்குவரத்து நெரிசல் குறைவதோடு மட்டுமல்லாமல் எரிபொருள் செலவும் பெரிதும் குறையும். இந்த சாலை திட்ட பணிகள் ரங்கம்பாளையம் மற்றும் சென்னிமலை   பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால் சற்று தேக்கமடைந்து இருந்தது.  நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

 எனவே, அந்தப் பணிகளும் இன்னும்  ஓரிரு மாதத்துக்குள் முடிவடையும். முதலமைச்சர் ஈரோட்டுக்கு வரும்போது பீச் சாலை திட்டத்தையும் திறந்து வைக்க வாய்ப்புள்ளது.  மேலும், முதலமைச்சர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் மேடு வரை ரூ.300 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க உறுதியளித்தார்.

அதன்படி அந்தப் பாலப்பணிகளுக்கான மாதிரி வரைபடம்  தயார் நிலையில் உள்ளது. மண் பரிசோதனைகளும்  பெருந்துறை சாலையில் நிறைவடைந்துள்ளன. இந்த புதிய மேம்பாலப்பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க வாய்ப்புள்ளது என்றும் கே.வி. ராமலிங்கம் தெரிவித்தார்


Top