logo
அங்ககச்சான்று பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

அங்ககச்சான்று பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

22/Oct/2020 11:23:05

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் இரா.ஆனந்தசெல்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவல், அங்கக வேளாண்மை என்பது காலங்காலமாக விவசாயிகள் மேற்கொண்டு வரும் பராம்பரிய விவசாயமாகும். இயற்கை வேளாண்மையில் செயற்கை இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைத் தவிர்த்து தனிமைப்படுத்தப்பட்ட பண்ணைகளில் இருந்து  இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி இயற்கை வழி மேலாண்மை முறையில் சாகுபடி செய்யும் முறையே அங்கக வேளாண்மை எனப்படுகிறது.

இயற்கை வழியில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ  பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அங்கக விளை பொருள்களை பதப்படுத்துவோh; வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்து கொள்ளலாம். காய்கறி மற்றும் பழ மரங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளும் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள்

அங்ககச்சான்றளிப்பு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்ப படிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விவரக்குறிப்பு 3 நகல்கள், பண்ணையின் வரைபடம், மண் பரிசோதனை மற்றும் பாசன நீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர்த் திட்டம் துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நிலத்திற்கான சிட்டா நகல், ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல் , பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க  வேண்டும்.

பதிவு கட்டணமாக  சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.2,700, பிற விவசாயிகளுக்கு ரூ.3,200 , குழு அமைப்புகளுக்கு ரூ.7,200, வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400 உரிய வங்கி வரைவோலை முலமாக செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை  பின் வரும் முகவரியில்  தொடர்பு கொள்ளலாம்.

விதைச்சான்று  மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகம், காட்டுப் புதுக்குளம், புதுக்கோட்டை. 04322- 227667. 99947 97879.

 


Top