logo
புதுக்கோட்டை உழவர் சந்தையில் வெளியில் விற்பனை செய்பவர்களை அப்புறப்படுத்த கோரிக்கை

புதுக்கோட்டை உழவர் சந்தையில் வெளியில் விற்பனை செய்பவர்களை அப்புறப்படுத்த கோரிக்கை

21/Oct/2020 09:50:00

புதுக்கோட்டையில் கடந்த 20 ஆண்டுகளாக உழவர் சந்தை இயங்கி வருகிறது. காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தங்களத காய்கறிகளை குறைந்த விலைக்கு கொடுக்காமல் நேரடியாக விற்பனை செய்வதற்காக தான உழவர் சந்தை உருவாக்கப்பட்டது. 

அதன்படி இங்கு வியாபாரம் செய்யும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தை பட்டாவை வேளாண் விற்பனை குழு அதிகாரிகளிடம் முறையாக சமர்பித்து அதன் பின்னர் அரசால் அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு தான் உழவர் சந்தைக்குள் விவசாயிகள் வியாபாரம் செய்ய முடியும்.  புதுக்கோட்டை உழவர் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசிடம் இருந்து அடையாள அட்டை பெற்றுக்கொண்டு 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். 

வெளிக்கடைகளால் விவசாயிகளின் விற்பனை பாதிப்பு: சமீபகாலமாக உழவர் சந்தைக்கு வெளியே பல வியாபாரிகள் அடையாள அட்டை இல்லாமல் தற்காலிக கடை போட்டு காய்கறி வியாபாரம் செய்து வருவதால் தங்களுக்கு விற்பனை பாதிக்கபபடுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.. மேலும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்:  மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அரசு போக்குவரத்துக்கழகம்  பேருந்துகளை உழவர் சந்தைக்கு விடுவதை நிறுத்தி விட்டதால் தாங்கள் காய்கறிகளை சந்தைக்கு எடுத்து வரமுடியாமல் அவதிபபட்டு வருவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து  உழவர் சந்தை விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில,

நாங்கள் 2000 -ஆம் ஆண்டிலிருந்து தோட்டக்கலையின் மூலமாக விவசாய உழவர் சந்தை அடையாள அட்டை பெற்று எங்களின் விவசாயப் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகிறோம். மேலும், உழவர் சந்தை இரண்டு வாயில்களையும் வெளி ஆட்கள் கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதன் மீது நிர்வாகத்திடம் புகார் அளித்தும்  நடவடிக்கைள் எடுக்கவில்லை.

 தற்பொழுது புதிதாக குழுக்கடைகள் என்ற பெயரில் விவசாய கடைகளை வெளியாட்கள் ஆக்கிரமித்துள்ளனர். எங்களுக்கு விவசாய பொருட்களை விற்பதற்கு போதுமான கடைகள் இல்லை. ஆனால் குழுக்கடைகளுக்கு விவசாய கடைகளை ஒதுக்கீடு செய்துள்ளனர்.


உழவர் சந்தையில் கழிவறை பல மாதங்களாக சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கஜா புயலில் விழுந்த மரங்களை பலமுறை புகார் கொடுத்தும் அப்புறப்படுத்தப்படவில்லை.

உழவர் சந்தைக்குள் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.  கஜா புயல் மற்றும் தற்பொழுது பெய்த மழையினால் வளாக சாலை மற்றும் மின் கம்பிகள் சேதம் அடைந்துள்ளது. அதனையும் புதுப்பித்து தர வேண்டும் என உழவர் சந்தை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    


Top