logo
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 998 பேர் சிகிச்சை

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 998 பேர் சிகிச்சை

20/Oct/2020 10:24:31

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.வைரஸ் வீரியம் அதிகரித்து காணப்படுவதால் தினமும் உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது.

பொது போக்குவரத்து, கட்டுப்பாடுகள் இன்றி பொதுமக்கள் வெளியே சுற்றுதல், பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறி போன்ற காரணங்களால் மாவட்டத்தில் வைரஸ் வேகமாக பரவியது. முதலில் மாநகராட்சி பகுதியில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது. 

பின்னர் மாவட்டம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. இருமல் காய்ச்சல் கண்டறியும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மேலும் கொரோனா  பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் ஸ்கிரீனிங் மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. அறிகுறி இல்லாமல் வருபவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் மாவட்டத்தில் வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.  நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று   மொத்த பாதிப்பில் 100 -க்கு கீழ் சென்றது. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டு உள்ள  பட்டியலின்படி மாவட்டத்தில் மேலும் 90  பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 223 ஆக உயர்ந்துள்ளது. 

அதேநேரம் நேற்று ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர்  எண்ணிக்கை 8 ஆயிரத்து 112 ஆக உயர்ந்துள்ளது.  சில நாட்களாக பாதிப்பைக் காட்டிலும் குணமடைந்து வருபவர்கள்  எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. 

தற்போது வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அரசு அறிவித்துள்ள  பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 


Top