logo
ஈரோட்டில் ரூ. 2 கோடி மோசடி:  பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

ஈரோட்டில் ரூ. 2 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

20/Oct/2020 10:15:57

ஈரோடு மாவட்டம், பவானியில் தனிநபர் மற்றும் குழு கடன் வழங்குவதாக கூறி ஆயிரத்துக்கு  மேற்பட்டோரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்த நபர்கள் மீது  நடவடிக்கைகோரி  பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவதாக கூறி ஈரோடு மாவட்டம், பவானி, காலிங்கராயன்பாளையத்தில் சன் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் கடந்த 23 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பவானி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனிநபர் கடனாக  ரூ.1  லட்ச  முதல் ரூ. 3 லட்ச  வரையும் , குழு கடனாக நபர் ஒருவருக்கு தலா ரூ. 45 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தனர்.

 இதற்காக தனிநபர் கடன் வழங்க  டெபாசிட் தொகையாக  15 ஆயிரம் ரூபாயும் , இன்சூரன்ஸ் தொகை 2,500 வழங்கினால் தனிநபர் கடன் வழங்கப்படும் என்றும், குழு கடன் வழங்க இன்சூரன்ஸ் தொகை தலா 1,250 ரூபாயும் வழங்கினால் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதத்தில் கடன் வழங்கப்படும் என சன் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் அறிவித்தது.

இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிநபர் கடன் வேண்டியும்,  குழு கடன் வேண்டியும் ரூ. 2 கோடி வரை அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்தனர். அனைவருக்கும் புதன்கிழமை கடன் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் நேற்று திடீரென நிறுவனம் இருந்த அலுவலகத்தை காலி செய்து விட்டு சென்று விட்டனராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். கடன் வழங்குவதாக கூறி 2 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோரிடம்  ரூ. 2 கோடி வரை மோசடி செய்த சம்பவம் ஈரோடு மாவட்ட மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Top