logo
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனக்கோயில்களை அகற்றுவதைக் கண்டித்து வனக்கோயில் வழிபாடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனக்கோயில்களை அகற்றுவதைக் கண்டித்து வனக்கோயில் வழிபாடு

16/Oct/2020 09:40:45

இது குறித்து, தமிழ்நாடு பழங்குடிமக்கள் சங்க மாவட்ட அமைப்பாளர்  எஸ்.மோகன்குமார் வெளியிட்ட அறிக்கை:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சத்தியமங்கலம்,ஆசனூர் ஆகிய  வனக்கோட்டங்களுக்குட்பட்டு சுமார் 268 வனக்கோயில்கள் உள்ளனஇக்கோயில்கள்  அனைத்துமே நூற்றாண்டுகளுக்கும் மேலாக பழங்குடியினர் மற்றும் வனம் சார்ந்து வாழும் இதர சமூக மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருபவையாகும்.குறிப்பாக பழங்குடியினரின் வழிபாடு தனிப்பட்ட வகையிலானதுஇயற்கையையும், தமது மூதாதையரின் நினைவிடங்களையுமே பழங்குடியினர் வழிபடுவது வழக்கம்.

இக்கோயில்கள் பெரும்பாலும் சுற்றுச் சுவர்களோ, கோபுரம் போன்ற அமைப்புகளோ இல்லாமல் திறந்தவெளியில் கடவுளர் சிலைகள் அல்லது நடுகற்கள் அமையப்பெற்றதாகவே இருக்கும்.சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு சமீபகாலமாக வனத்துறை பழங்குடியினரின் பல்வேறு பாரம்பரிய உரிமைகளை சட்ட விரோதமாக மறுத்து வருகிறது. அதன் உச்சமாக வனக்கோயில் வழிபாடுகளையும் தடுத்து வருகிறது.

 

ஆசனூர் வனக்கோட்டம்,ஆசனூர் சரகம்,அரேப்பாளையம் பிரிவிற்கருகில்,திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பிசில் மாரி கோயில் அமைந்துள்ளது. இதுவும் மேற்கூரையோ,சுற்றுச்சுவரோ அல்லாத, திறந்தவெளியில் உள்ள கோயிலாகும். கடந்த செவ்வாய்கிழமை(13/10/20) மாலை சுமார் ஐந்து மணியளவில்,ஆசனூர் வனக்கோட்ட அலுவலர்,ஆசனூர் வனச்சரக அலுவலர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் டெம்போ,பொகலைன் போன்ற வாகனங்களோடு வந்து, கோயிலில் உள்ள சிலையை தோண்டி,டெம்போவில் கயிற்றைக்கட்டி இழுத்து அகற்றி எடுத்துச்சென்று விட்டனர்.

 

அங்கிருந்த மக்கள் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி இந்நடவடிக்கை யில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.தொடர்ந்து அருகில் உள்ள பிற வனகிராமங்களிலும் வனப்பகுதியில் உள்ள கோயில்களை இடம் மாற்றிக் கொள்ளுமாறு மக்களை எச்சரித்தும் வருகின்றனர். ஆசனூர் வனத்துறையினரின் இந்த நடவடிக்கை பழங்குடியினரின் வழிபாட்டு,பண்பாட்டு உரிமையை முற்றிலும் பறிப்பதாகும்.மேலும் சட்ட விரோதமானதாகும்.

2006 வன உரிமைச்சட்டம்,பழங்குடியினரின் சமூக வன உரிமைகளை அங்கீகரிக்கிறது.சிறு வனப்பொருட்களை சேகரித்தல்,கால்நடைகளை மேய்த்தல்,பாரம்பரிய வனக்கோயில்களில் வழிபாடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை வன உரிமைச்சட்டம் அங்கீகரிக்கிறது.ஆனால் ஆசனூர் வனக்கோட்ட அலுவலர் சட்டத்திற்கு விரோதமாக இந்த உரிமைகளை மறுத்து வருவதோடு,கோயில் சிலைகளைக்கூட அகற்றும் அளவிற்கு சென்றுள்ளார்.

வன உரிமைச்சட்டத்தை மறுப்பதும்,பழங்குடியினரின் வழிபாட்டைத் தடுப்பதும் எஸ்.சி/எஸ்.டி.வன்கொடுமைத் தடுப்புச்சட்டப்படி குற்றமாகும். அகற்றப்பட்ட ஆசனூர்,பிசில் மாரி கோயில் சிலையை திரும்பவும் அங்யே நிறுவ வேண்டும்..புலிகள் காப்பகம் எனபதால் வன உரிமைச்சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை சட்ட விரோதமாக மறுக்கக்கூடாது.

கோயில் சிலைகளை அகற்றிய ஆசனூர் டிஎப்ஓ,ஆசனூர் ரேஞ்சர் உள்ளிட்ட வனத்துறையினர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன் கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டு்ம் என வலியுறுத்தும் வகையில், வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆசனூர் பிசில் மாரி கோயில் வளாகத்திலேயே பழக்குடியினரின் வனக்கோயில் வழிபாட்டை நடத்துவது தமிழ்நாடு பழங்குடிமக்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது.

இந்நிகழ்வுக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் தலைமை வகிக்கவுள்ளார். அனைத்து அரசியல் கட்சி முன்ணணியினர், உள்ளாட்சி மன்ற பிரதிகள், பழங்குடி கிராமத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினரும் இதர வனம்சார்ந்து வாழும் மக்களும் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

                                        

 

Top