logo
ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வலியுறுத்தி கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு

ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வலியுறுத்தி கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு

16/Oct/2020 09:19:10

ஈரோடு: ஈரோடு மேட்டூர் சாலையானது 4 மாதங்களுக்கு முன்பு  ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. பெருந்துறை, கே.என்.வி. சாலையில்  இருந்த வாகனங்கள் மட்டும் மேட்டூர் சாலை வழியாக  அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் சத்தியமங்கலம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஈரோடு நாச்சியப்பா வீதி வழியாக திருப்பி விடப்பட்டு வருகிறது. நாச்சியப்பா வீதி வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டதால் நாச்சியப்பா  வீதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. 

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சவீதா ரோடு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. நாச்சியப்பா வீதிப் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் கடைகள் உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்  சாலையைக்கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்தப் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன்  நடந்து சென்று வருகின்றனர்.

மேலும், இந்தப் பகுதியில் சின்ன மார்க்கெட் பகுதி உள்ளதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது போக்குவரத்து நெரிசலால் காய்கறிகள் வாங்கி செல்லும் பெண்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இந்நிலையில் நாச்சியப்பா நால்ரோடு பகுதியில் போக்குவரத்து போலீஸார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி வந்தனர்..எனினும் போக்குவரத்து  நெரிசல் குறைந்தபாடில்லை. இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பாக, எஸ்.பி. அலுவலகத்தில் கோட்டை பொது மக்கள் நலச் சங்கம் சார்பில் நாச்சியப்பா வீதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சீரமைக்க  வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. எனினும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையைக் கண்டித்து இன்று(16.10.2020) ஈரோடு நாசியப்பா பகுதியில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கடைகளில் கருப்புக் கொடிகளைக் கட்டி தங்கள் எதிர்ப்பை  மாவட்ட நிர்வாகத்துக்கு உணர்த்தினர்.  இதற்கு மேலும்  மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Top