logo
நாசா செல்லும் புதுக்கோட்டை மாணவி ஜெயலட்சுமியின் சமூகப்பார்வை..

நாசா செல்லும் புதுக்கோட்டை மாணவி ஜெயலட்சுமியின் சமூகப்பார்வை..

15/Oct/2020 06:55:49

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்லவுள்ள மாணவி ஜெயலட்சுமியின் சமூக அக்கறையான செயல்பாடு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.

 புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையைச் சேர்ந்த இந்த பிளஸ் 2 மாணவி, அமெரிக்காவில் உள்ள நாசா கென்னடி வின்வெளி ஆய்வு மையத்தைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பைப் பெற்றவர். கொரானாவால் பயணம் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. மிகவும் வறுமையில் இருக்கும் இந்த பெண்ணின் அமெரிக்கப் பயணத்திற்கு  பல்வேறு நபர்கள் அமைப்புகளிடமிருந்து தேவையான நிதி கிடைத்துள்ளது.

அவ்வாறு இவருக்கு உதவி செய்ய வந்தவர்கள்தான் கிராமாலயா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம். அத்தொண்டு நிறுவனத்திடம் எனக்கு போதிய நிதி சேர்ந்துவிட்டது, ஆனால், எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகளில் கழிவறை வசதி கிடையாது. பெண்கள் மிகவும் அவதிப்படுகிறோம்.எனவே எங்களுக்கு கழிவறை கட்டித் தர ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

கிராமத்திற்கு நேரடியாக வந்து பார்த்த கிராமாலயா நிறுவனர் ஜி.தாமோதரன் அதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். தற்போது 120 வீடுகளுக்கு கழிவறைகள் கட்டிக்கொடுக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு வீடாகச் சென்று கழிவறையின் அவசியத்தைப் பற்றிப் பேசி, ஒவ்வொருவரையும் ரூ.5000  மதிப்பிலான பொருளையோ, உழைப்பையோ வழங்கக் செய்து ரூ.25,000 மதிப்பிலான வசதியான கழிப்பறைகளை பெற்றுத் தந்திருக்கிறார் இந்த ஜெயலட்சுமி. 

இது குறித்து, புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், பேராசிரியர் சா. விஸ்வநாதன் கூறியது: தந்தையை இழந்த இவர் ,மன நலம் பாதிக்கப்பட்ட தாய், தம்பி மூவரும் தன் சித்தப்பாவின் பராமறிப்பில் இருக்கிறார்கள். ஆதனக்கோட்டையில் முந்திரி பருப்பு தயாரிப்பு குடிசைத் தொழில். அதில் இவரும் இவர் தம்பியும் வேலை செய்து  தங்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

இந்த நிலையிலும், சமூக அக்கறையுடன் இவர் தனது கிராமத்துக்குச்செய்திருக்கும்  பணி மெச்சத்தகுந்தது. புதுக்கோட்டையில்  இவரைச் சந்தித்து, பெண்கள் முன்னேற்றம் தொடர்பான தினமணியின்  மகளிர் மணி தொகுப்பு, காந்தியின் சத்திய சோதனை உட்பட பல நூல்களையும் அன்பளிப்பாக வழங்கி பாராட்டும் வாய்ப்பு கிடைத்தது என்றார்.

Top