logo
பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளை சிரமப்படுத்திவரும் தரைத்தளம் சீரமைக்கப்படுமா?

பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளை சிரமப்படுத்திவரும் தரைத்தளம் சீரமைக்கப்படுமா?

13/Oct/2020 04:56:00

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையப் பகுதியில் திருமயம் சாலையில் அமைந்துள்ள பயணிகள் நிழல்குடையின் தரைத்தளம் சீரமைக்கப்படாததால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பது பேருந்துக்காக காத்திருக்கும் அனைவரும் அவதிப்படும்  நிலை தொடர்கிறது.

 கடந்த 6  ஆண்டுகளுக்கு முன் புதுகை நகராட்சி்ப்பகுதியில் சுமார் ரூ. 25  கோடி செலவில்  தார்ச்சாலைகள், சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டன. இது தவிர, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியின் மூலமாக நகரின்  பல்வேறு  பகுதிகளில் பயணிகள்  நிழல்குடைகள் அமைக்கப்பட்டன.

அதில், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியின் கடைசி உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் இருந்த எஸ். ரகுபதியின் தொகுதி மேம்பாட்டு  நிதி சுமார் 10 லட்சத்தில் புதுகை பழைய பேருந்து  நிலையப்பகுதியில் திருமயம் சாலையில் பேருந்து நிறுத்தம் சென்னையில் உள்ள நிழல்குடை மாதிரியில் அமைக்கப்பட்டது.

மேடையில் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகளும், அப்பகுதியில் டைல்ஸ் பதிக்கப்பட்டன. ஆனால், தற்போது இருக்கைகள் சமூக விரோதிகளால் பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டதுடன், டைல்ஸ் தனது நிறத்தை இழந்து அசுத்தமாக்காட்சியளிக்கிறது.

 சாலையையொட்டியுள்ள தரைப்பகுதி குண்டும் குழியுமாக சேதமடைந்து கிடப்பதால், சிறிய தூரல் விழுந்தால் கூட அப்பகுதியில்  மழை  நீர் தேங்கி நிற்கிறது. இதனால், மழைக்காக இந்தப் பேருந்து நிறுத்தத்தில் ஒதுங்கி நிற்கும் பயணிகள் தரைப்பகுதியில் நிற்க முடியாமல் சிரமப்படுவது தொடர்கதை.. 

எனவே, அண்ணாசிலை அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்திலும் இதே நிலைதான் இருந்தது. பயணிகளின் சிரமத்தை கவனத்தில் கொண்டு அப்பகுதியின் தரைத்தளத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டதால் பிரச்னை தீர்ந்தது. அதே போல, இந்த பேருந்து நிறுத்தப் பகுதியின்  தரைத்தளத்தையும் சிமெண்ட் பேவர் பிளாக் கற்களைப் பதித்து  பயணிகளின் சிரமத்தைத் தீர்க்க நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். 


Top