logo
பணத்தை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி மாற்றுத்திறனாளி இளைஞர் ஆட்சியரிடம் புகார்

பணத்தை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி மாற்றுத்திறனாளி இளைஞர் ஆட்சியரிடம் புகார்

12/Oct/2020 05:35:41

புதுக்கோட்டை: ஆசை வார்த்தைகள் பேசி ஒன்றரை லட்சத்தை அபகரித்துச் சென்ற நண்பரிடம் இருந்து  பணத்தை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மாற்றுத் திறனாளி இளைஞர் மனு அளித்தார்.

 புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் தனபால். மிகவும் குள்ளமாக இருக்கும் இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு,  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் வேலை பார்த்து வந்தார். அதே  மையத்தில் அவருடன் வேலை பார்த்து வந்த  பிரபாகரன் என்பவர் தனபாலிடம் நாம் இருவரும் சேர்ந்து தனியாக கம்ப்யூட்டர் மையம் வைக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினாராம். இதை நம்பிய இளைஞர் தனபால், தன்னிடமிருந்த ஒன்றரை லட்சம் ரொக்கம் மற்றும் லேப்டாப், செல்போன் மற்றும்  உண்டியலில் சேமித்து   வைத்திருந்த   பணத்தையும் பிரபாகரனிடம் கொடுத்தாராம்.

ஆனால், பேசியபடி கம்யூட்டர் மையம் தொடங்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தான் கொடுத்த பணம் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை திருப்பித்தருமாறு பிரபாகரனிடம் தனபால் கேட்டபோது, அவர் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மனமுடைந்த இளைஞர் தனபாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதுடன் குடும்பத்திலும் பிரச்னை ஏற்பட்டதாம்.  

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னுடைய உறவினருடன் வந்த தனபால்,  ஆசை வார்த்தைகள் கூறி தன்னை ஏமாற்றிய  இளைஞர்  பிரபாகரன் மீது நடவடிக்கை எடுத்து அவரிடமிருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Top