logo
வருமானத்தை இழந்து தவிக்கும்  பூசாரிகளுக்கு பண்டிகை கால நிதியுதவி ரூ. 5000 வழங்க கோரிக்கை

வருமானத்தை இழந்து தவிக்கும் பூசாரிகளுக்கு பண்டிகை கால நிதியுதவி ரூ. 5000 வழங்க கோரிக்கை

12/Oct/2020 04:55:40

இது குறித்து, கோவில் பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் பி. வாசு மற்றும் நிர்வாகிகள்  சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் எஸ். பிரபாகரிடம் நேரில் அளித்த மனுவிவரம்:

இந்துக்களின் முக்கிய பண்டிகை தீபாவளி இந்த இனிய நன்னாளில் அனைத்து மக்களுக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்க வேண்டும், தீயவை அகன்று நல்லவை மலர்ந்திட வேண்டும், அனைவரின் வாழ்விலும் வறுமை அகல வேண்டும், செழுமை பிறக்க வேண்டும். இதற்கு தீபாவளி திருநாள் வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை, கொரோனா என்னும் கொடிய நோய் மேலும் பரவாமல் தடுக்க வேப்பிலை தீர்த்தம் மூலமாக அனுதினமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது வருவது பூசாரிகளே..

கடந்த ஆறு மாதமாக கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் முக்கிய பூஜைகள் மட்டுமே நடந்து வந்தது தற்போது சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் கலந்து கொள்ளாத வகையில், தேர்த் திருவிழாக்கள், குடை ஊர்வலம் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன,

இதுபோன்ற விழாக்காலங்களில் தான் கிராமப்புறங்களில் உள்ள திருக்கோவில்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள திருக்கோவில்களில்  தட்டுகாசுகள் மூலம்  பூசாரிகளுக்குக் கிடைத்து வந்த சொற்ப வருமானமும் நின்று போனது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திருக்கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள் மாத ஊதியம் ஏதும் வழங்கப்படாமல் தட்டுகாசுகள் ஒன்றையே வருமானமாக நம்பி வாழ்க்கை நடத்தி வந்தனர். கொரோனா நோய் தொற்று அச்சத்தால்   பக்தர்கள் வருகை குறைந்து தட்டுகாசுகள் வருமானம் குறைந்து விட்டது. இந்த வருமானத்தை மட்டுமே நம்பி  வாழ்ந்து வந்த  பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 2000 சுமார் 20,000 பூசாரிகளுக்கு மட்டுமே அரசால் வழங்கப்பட்டது.

எனவே, பூசாரிகளுக்கு மாத ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை. பூசாரிகளுக்கு எந்தவித பண்டிகை முன்பணமும் வழங்கப்படுவது இல்லை. இச்சூழலில், வரும் தீபாவளி பண்டிகை கொண்டாட வழியின்றி பூசாரிகள் தவிக்கும் நிலையைக்  கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை தமிழக அரசுக்கு எந்தவித நிதிச் சுமையினையும்  ஏற்படுத்தாதவாறு, அறநிலையத் துறையிடம் உள்ள சுமார் ரூ. 400 கோடி நிதியில் இருந்து பூசாரிகள் தீபாவளி பண்டிகை கொண்டாடும் வகையில், துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்கள் என்ற பாகுபாடு காட்டாமல் மாத ஊதியமே இல்லாமல்  பணியாற்றும் அனைத்து பூசாரிகளுக்கும்  ரூ.5000 வழங்க  ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நல சங்கம் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆணையரிடம் மனு அளித்தபோது, மாநில பொருளாளர் கே.சுந்தரம், பூசாரியின் குரல் ஆசிரியர் புருஷோத்தமன், மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

Top