logo
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் பட்டியலில் தமிழகத்துக்கு 4-வது இடம்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் பட்டியலில் தமிழகத்துக்கு 4-வது இடம்

09/Oct/2020 12:02:29

 நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே நேரத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி:  கொரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 70,496 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 69,06,152 ஆக அதிகரித்துவிட்டது. மேலும் 964 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 1,06,490 ஆக அதிகரித்துள்ளது. எனினும், மொத்த  பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு 1.54 சதவீதமாக குறைந்துவிட்டது.

அதே நேரத்தில் 59,06,070 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 85.52 சதவீதமாகும். இப்போதைய நிலையில் 8,93,592 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 13.20 சதவீதம் ஆகும். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 12.94 சதமீகிதமாக உள்ளது. 

ஆகஸ்ட் 7-ஆம் தேதி 20 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு ஆகஸ்ட் 23-இல் 30 லட்சமாகவும், செப்.5-இல் 40 லட்சமாகவும், செப். 16-இல் 50 லட்சமாகவும் இருந்தது. செப்.28-ஆம் தேதி மொத்த கொரோனா பாதிப்பு 60 லட்சத்தைக் கடந்தது. அக்டோபர் 4-ஆம் தேதி 65 லட்சமாக அதிகரித்தது. கொரோனா பாதிப்பு முதல் ஒரு லட்சத்தை எட்ட 110 நாள்கள் ஆனது. எனினும், அடுத்த 59 நாள்களில் 10 லட்சத்தைக் கடந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக இதுவரை 39,430 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கர்நாடகத்தில் 9,675பேரும், ஆந்திர மாநிலத்தில் 6,128 பேரும், தில்லியில் 5,653 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இதைவிடக் குறைவாகவே கொரோனா உயிரிழப்பு உள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரம் இரண்டாவது இடத்திலும், கர்நாடகம் மூன்றாவது இடத்திலும், தமிழகம் நான்காவது இடத்திலும் உள்ளது. 

Top