logo
அமெரிக்கா நாட்டின்  ஹெச்1பி விசா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிப்பு

அமெரிக்கா நாட்டின் ஹெச்1பி விசா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிப்பு

08/Oct/2020 11:44:46

 நியுயார்க்- புதுதில்லி:  அமெரிக்காவில் ஏற்கெனவே பணியாற்றிய வெளிநாட்டவர்கள் தங்கள் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்கும் வகையில் ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) விதிமுறைகளில் தளர்வுகள் வழங்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக வெளிநாட்டவர்களை அமெரிக்கா பணியில் அமர்த்தி வருகிறது. முக்கியமாக ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக இந்தியர்கள்தான் அதிக அளவில் பலனடைந்து வருகின்றனர்.அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு ஹெச்1பி நுழைவு இசைவு பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. கொரோனா நோய்த்தொற்றால் அமெரிக்காவில் அமல்படுத்த பொது முடக்கம் காரணமாக பலர் வேலையிழந்தனர் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் நடப்பாண்டு இறுதி வரை ஹெச்1பி உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான நுழைவு இசைவுகள் வழங்கப்படாது என்று அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி அறிவித்தார்.

மேலும், அமெரிக்காவில் ஏற்கெனவே பணியாற்றி தற்காலிகமாக சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளவர்களுக்கும் ஹெச்1பி நுழைவு இசைவு வழங்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்தது. அதன் காரணமாக அமெரிக்க நிறுவனங்களில் பணியை எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள்  கடும் எதிர்ப்பைத்தெரிவித்திருந்தனர்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் சூழலில், சுகாதாரத் துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் பணியாற்றி வந்த வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பல எம்.பி.க்கள்  அரசுக்கு கடிதங்களும் அனுப்பினா்.

இந்நிலையில், ஹெச்1பி நுழைவு இசைவு வழங்குவதற்கான விதிமுறைகளில் சில தளா்வுகள் வழங்கப்படுவதாக அமெரிக்க அரசு புதன்கிழமை அறிவித்தது. இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவில் ஏற்கெனவே பணியாற்றி வந்தவர்களுக்கு ஹெச்1பி, எல்1 நுழைவு இசைவுகளை வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதே வேளையில், அத்தகைய வெளிநாட்டுப் பணியாளர்கள் ஏற்கெனவே பணியாற்றிய நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அதேபோல், அவர்கள் ஏற்கெனவே மேற்கொண்டிருந்த பணியை மட்டுமே தொடா்ந்து மேற்கொள்ள முடியும். இத்தகைய இக்கட்டான சூழலில் ஏற்கெனவே பணியாற்றி வந்தவர்களுக்கு பதிலாக புதிய பணியாளர்களை நியமிப்பது நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பணியாற்றி வந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான தேவை தற்போதும் இருப்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அந்தப் பணியாளர் தற்போது வீட்டிலிருந்து அதே பணியை தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு ஹெச்1பி நுழைவு இசைவு வழங்கப்பட மாட்டாது. புதிய தளர்வுகள் அனைத்தும் வெளிநாட்டுப் பணியாளர்களின் மனைவிக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் பொருந்தும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு மூலமாக சுகாதாரப் பணியாளர்கள், சுகாதாரம் தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோருக்கு பலன் கிடைக்கும் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அரசு நிறுவனங்களின் ஒப்பந்தப் பணிகளில் ஹெச்1பி நுழைவு இசைவு வைத்திருப்போரை பணியமர்த்துவதற்குத் தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

                                                                               

        


Top