logo
வாழ்வாதாரம் பாதிப்பு: மேட்டூர் சாலையை இருவழிப் பாதையாக மாற்ற சிறுவியாபாரிகள் கோரிக்கை

வாழ்வாதாரம் பாதிப்பு: மேட்டூர் சாலையை இருவழிப் பாதையாக மாற்ற சிறுவியாபாரிகள் கோரிக்கை

07/Oct/2020 11:48:27

ஈரோடு மேட்டூர் சாலையில்  வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அச்சாலையை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டுமென காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் மேட்டூர் சாலை மிக முக்கிய போக்குவரத்து சாலையாக இருந்து வருகிறது. இந்தச் சாலையின் இருபுறமும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் வணிக நிறுவனங்கள் சிறு கடைகள் உள்ளன. மேலும், இந்த சாலை வழியாக தான் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஈரோடு காவல்துறையினரால்  மேட்டூர் சாலை ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டது.

அதாவது பெருந்துறையில் இருந்து வரும் வாகனங்கள் கே.வி.என். சாலையிலிருந்து வாகனங்கள் மட்டும் மேட்டூர் சாலை வழியாக தற்போது சென்று வருகின்றன. அதேநேரத்தில், சத்தியமங்கலம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் மேட்டூர் சாலைக்குப் பதிலாக ஈரோடு நாச்சியப்பா வீதி வழியாக திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால், நாச்சியப்பா வீதியிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தே காணப்படுகிறது. ஏற்கெனவே முனிசிபல் காலனி இடையன்காட்டுவலசு  பகுதி மக்கள் மேட்டூர் சாலையை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், எஸ்.பி. அலுவலகத்தில் மேட்டூர் ரோடு சிறு வியாபாரிகள் திரண்டு வந்து எஸ்.பி.யிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: மேட்டூர் சாலையில் சிறு வியாபாரம் செய்து எங்கள் குடும்பத்தை நடத்தி வந்த நாங்கள், அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து மேட்டூர் சாலை பகுதியை கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஒரு வழிப்பாதையாக காவல்துறையினர் மாற்றியதன் விளைவாக  பொதுமக்கள் வருகை இன்றி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட கடைகள் வியாபாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கொரோனா  காரணமாக  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாங்கள் இந்த ஒரு வழிப்பாதை அறிவிப்பால் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இப்பிரச்னையில் தலையிட்டு பழையபடி மேட்டூர் சாலையை  இருவழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கு வேண்டும்.                                                                              


Top