logo
 ஈரோடு  மாவட்டத்தில் விடிய விடிய மழை: அதிகபட்சமாக : குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 35 மில்லி மீட்டர் மழை  பதிவு

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய மழை: அதிகபட்சமாக : குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 35 மில்லி மீட்டர் மழை பதிவு

04/Sep/2021 10:15:15

ஈரோடு, செப்: ஈரோடு புறநகர் மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

 இந்நிலையில், நேற்று இரவு ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்துள்ளது.  குறிப்பாக குண்டேரி பள்ளம், கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி ,சென்னிமலை ,கவுந்தப் பாடி, அம்மாபேட்டை வரட்டுப்பள்ளம், தாளவாடி சத்தியமங்கலம், ஈரோடு மாநகர் பகுதிகளிலும் இரவு பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று பகல் வெயில் வெளுத்து வாங்கினாலும் இரவில் சாரல் மழை பெய்ய தொடங்கி தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது.

மாநகர் பகுதியில் நேற்று மாலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. குறிப்பாக திட்டப்பணிகள்  நடைபெறும் இடங்களில் சேரும் சகதியுமாக காட்சி அளித்தது. மூலப்பட்டறை பகுதி அருகே குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இத்துடன் மழை தண்ணீரும் இணைந்து குளம்போல் தேங்கி நின்றது. இந்த நாள் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். 

ஈரோடு வ உ சி பூங்கா பகுதியில் இயங்கும் நேதாஜி பெரிய காய்கறி மார்க்கெட்டில் மழை காரணமாக சேறும் சகதியுமாக தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் காய்கறி வியாபாரிகள் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மாவட்டத்திலேயே குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக 35 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 262 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு: குண்டேரிபள்ளம் - 35, கொடுமுடி - 33, மொடக்குறிச்சி - 30, பவானி - 24, சென்னிமலை - 21, கவுந்தப்பாடி - 15, அம்மாபேட்டை - 14.4, வரட்டுப்பள்ளம் - 14.4, ஈரோடு - 11, கோபி - 9.3, கொடிவேரி - 9.1, பெருந்துறை - 9, தாளவாடி - 9, சத்தியமங்கலம் - 7, நம்பியூர் - 7.

Top