logo
புதுக்கோட்டை மாவட்ட நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்

புதுக்கோட்டை மாவட்ட நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்

02/Sep/2021 11:59:09

புதுக்கோட்டை, செப்: புதுக்கோட்டை மாவட்ட நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது.

கூட்டுறவுத் துறையின் சார்பில் நடந்த பயிற்சி முகாமில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு நியாய விலை கடையில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பயிற்சி புத்தகங்களை மாவட்ட ஆட்சியர்   கவிதா ராமு  வழங்கிய பின்னர்,பேசியதாவது:

புதுக்கோட்டைமாவட்டத்தில் பொது விநியோகத் திட்டப் பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் வகையில் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம்  தற்போது  தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில்  690 முழு நேர நியாய விலைக் கடைகளும், 311 பகுதி நேர நியாய விலைக் கடைகளும்என மொத்தம் 1,001 அங்காடிகள் கூட்டுறவுத்துறையின் கட்டுபாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த, அங்காடிகளில் மொத்தம் 639 விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கடையின் பராமரிப்பு, கடையின் தூய்மை, பொருட்கள் இருப்பு மற்றும் பராமரிப்பு, பதிவேடுகள் பராமரிப்பு, பொதுமக்களுடன் கனிவான முறையில் பழகுதல், அவர்களது உடல்நலம் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு, நுகர்வோர் உரிமை மற்றும் மனஅழுத்தம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும் திறமையுடன் பணியாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

எனவே, இப்புத்தாக்கப் பயிற்சியானது விற்பனையாளர்களின், பணித்திறனையும் உடல் நலத்தையும், செயல்பாடுகளையும் மேலும் செம்மையாக்குவதாக அமையும் என்பதால், முதல் கட்டமாக இன்று ஒரு நாள் புதுக்கோட்டை மற்றும் திருமயம் வட்டாரங்களில் பணியாற்றும் 100 விற்பனையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. 

இதனை விற்பனையாளர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார். இம்முகாமில் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) மாரி, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) அண்ணாத்துரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Top