logo
ஈரோடு மாவட்டத்தில் முன்எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் முன்எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி

02/Sep/2021 12:08:50

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் போடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவேக்சின் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில்  செவ்வாய்க்கிழமை  ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சித்தோடு, பெருந்துறை ,பவானி அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட  180 இடங்களிலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 33 இடங்களிலும் என மொத்தம் 213 இடங்களில் 45 ஆயிரத்து 530 பேருக்கு டோக்கன் 100 முதல் 400 பேர் என்ற அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. 

மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.இதைப்போல நாளை கல்லூரிகள் திறப்பதை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் மாணவிகள் ஏராளமானோர் இன்று நடந்த தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்

மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் அந்தந்த தடுப்பூசி போடும் முகாமிற்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தற்போது மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. எனவே இதுவரை தடுப்பூசி போடாமல் இருக்கும் மக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Top