logo
பவானிசாகர் அணை பகுதியில் பரவலாக பெய்த மழையால்  விவசாயிகள் மகிழ்ச்சி

பவானிசாகர் அணை பகுதியில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

27/Aug/2021 12:45:17

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மிதமான  மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர்ப் பகுதியான சத்தியமங்கலம் பவானிசாகர், வரட்டுப்பள்ளம், அணை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் வெயில்  அடித்தது. சத்தியமங்கலத்தில் மதியம் வரை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மாலையில் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இதைப்போல், பவானிசாகர் அணை பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூரில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேபோல் தாளவாடி வரட்டுப்பள்ளம் குண்டேரிப்பள்ளம் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில்  இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:  நம்பியூர் - 30, சத்தியமங்கலம் - 26, பவானிசாகர் - 22.8, தாளவாடி - 8, வரட்டுப்பள்ளம் - 6, டேரி பள்ளம் - 1.6.

பவானிசாகர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக 600 கன அடி வீதம் அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.58 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 628  கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கன அடி என மொத்தம் 600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Top