logo
புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம்  புத்தகங்களுடன்  புத்தக கண்காட்சி தொடக்கம்

புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் புத்தகங்களுடன் புத்தக கண்காட்சி தொடக்கம்

24/Aug/2021 06:31:24

புதுக்கோட்டை, ஆக:  புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட மாபெரும் புத்தக விற்பனைக்கண்காட்சி நடைபெறுகிறது.

 சிதம்பரம், சேத்தியாதோப்பு, வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 11-ஆவது ஆண்டாக புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள ஸ்ரீமீனாட்சி மகாலில் புத்தக விற்பனை கண்காட்சி 20.8.2021 முதல்  5.9.2021 வரை நடைபெறுகிறு.

 இந்த கண்காட்சியை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  முனைவர் சாமி. சத்தியமூர்த்தி, வாசகர் பேரவை செயலாளர் எஸ். விஸ்வநாதன்,ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் மாரியப்பன், மேலப்பட்டி ஆசிரியர் ப.மகேஸ்வரன் உள்ளிட்டோர்  பார்வையிட்டு புத்தகங்களை தேர்வு செய்தனர்.

இந்த கண்காட்சியில்,   எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன்,  லட்சுமி, ரமணிச்சந்திரன், முத்துலட்சுமி ராகவன், மல்லிகாமணிவண்ணன், பாலமுருகன்,  இந்திரா சவுந்தர்ராஜன், சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்களின் நூல்கள், கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார் எழுதிய கவிதை கட்டுரை  நூல்கள்.


மற்றும்  நாவல்கள், கவிதை, இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சுயமுன்னேற்றம், பொதுகட்டுரைகள், ஆன்மீகம், ஜோதிடம், குழந்தை வளர்ப்பு, கல்வி, யோகா, சமையல்  நூல்கள், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் உள்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டில் கவனம் ஈர்த்த முக்கிய நூல்களான, தமிழக அரசின் தலைமைச்செயலர் வெ.இறையன்பு சுமார் 200 தலைப்புகளில் எழுதிய நூல்களும், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எழுதிய தன்னம்பிக்கை நூல்கள், தெற்கிலிருந்து ஒரு சூரியன், மாபெரும் தமிழக்கனவு,  கிரியாவின் தமிழ்அகராதி  ஆகிய படைப்புகள்  விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

புத்தக கண்காட்சி  நிர்வாகி விஜயரங்கன்  கூறியதாவது: புத்தகக் கோட்டையான புதுக்கோட்டையில் 11 -ஆவது ஆண்டாக எங்கள் நிறுவனம் சார்பில் புத்தகக்கண்காட்சி நடத்தப்படுகிறது. அதற்கு, புதுக்கோட்டை  மாவட்ட மக்கள் அளித்து வரும் பேராதரவே  முக்கிய காரணம். நடப்பாண்டுக்கான புத்தக விற்பனை கண்காட்சி வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மக்களின் ஆதரவைப் பொருத்து கண்காட்சி நடைபெறும் நாள்கள் நீட்டிக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் விற்பனை கண்காட்சியில், வாசகர்கள் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் அதன் விலையில்  10 சதவீதம் சலுகை  வழங்கப்படுகிறது என்றார் அவர். 

Top