logo
தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 80 லட்சத்து 57 ஆயிரத்து 397 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது:   மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 80 லட்சத்து 57 ஆயிரத்து 397 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

23/Aug/2021 10:03:23


புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், செயின்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியில் கோவிட் தடுப்பூசி முகாமை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு  முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

 பின்னர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியண் கூறியதாவது:கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியில் தன்னிறைவு என்கின்ற வகையில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்கெனவே கடந்த வாரத்தில்  கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்திலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தியதில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 

தமிழகம் முழுவதும் பல்வேறு கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 56 கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இக்கிராம ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதுவரை தமிழகத்திற்கு 2,69,91,100 எண்ணிக்கை கோவிட் தடுப்பூசிகள் வந்தடைந்தது. இவைகளில் 2,61,20,624  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு 21,62,960 எண்ணிக்கை கோவிட் தடுப்பூசிகள் வந்தடைந்தது. தனியார் மருத்துவமனைகளில் பணம் மற்றும்  CSR (Corporate Social Responsibility) நிதியின் மூலம்  19,36,723 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,80,57,397 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளின் கட்டுமானத் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் துணை சுகாதார நிலையங்கள் கட்டுமான மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் CSR (Corporate Social Responsibility) நிதி பங்களிப்புடன் விலையில்லா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வந்தடைகின்ற தடுப்பூசிகள் அனைத்தும் உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் இறுதியில் புதிய தடுப்பூசிகள் வருகின்ற பொழுது, அவையும் பிரித்து வழங்கப்படும். 

தமிழ்நாடு முதலமைச்சர் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு பிரதமரிடம்  கோரிக்கை வைத்துள்ளார்கள். நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அமைத்து,  அறிக்கை பெறப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர்  கலைஞர்  1973-ஆம் ஆண்டு சென்னையில் முதல் மேம்பாலமான அண்ணா மேம்பாலத்தை கட்டினார். தற்போதைய  முதலமைச்சர் அவர்கள் 1996-ஆம் ஆண்டு சென்னை மேயராக இருந்த பொழுது இந்தியாவிலேயே உள்ளாட்சி அமைப்புகள் மேம்பாலங்கள் கட்ட முடியும் என்பதை உணர்த்தும் வகையில் 9 மேம்பாலங்களை குறித்த காலத்திற்குள் கட்டி முடித்தார். அதேபோன்று சென்னை மாநகராட்சி பல்வேறு விருதுகளை பெற்றது. ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை சென்னை மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்து விருது வழங்கியது. இதேபோன்று சென்னையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றார் அமைச்சர்  மா.சுப்பிரமணியன் . 

இதில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், பொதுசுகாதாரத் துணை இயக்குநர் அர்ஜுன்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

Top