logo
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி

05/Oct/2020 12:56:02

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் காணொளிக்காட்சி முறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது பகுதி அடிப்படை தேவைகளுக்காக ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைக்கப்பட்டிருந்த மனு பட்டியில் நேரில் வந்து மனுக்களை போட்டுச் சென்றனர்.

 இதில், திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே உள்ள தேனீர் குளம் பகுதியைச் சேர்ந்த திருமலைநம்பி(51) ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து நின்று கொண்டுதான் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை  பறிமுதல் செய்தனர்.

தற்கொலைக்கு முயன்ற திருமலை நம்பி கூறுகையில், தேனீர் குளம் பகுதியில் தனக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அதனை தனது உறவினர்கள் சேர்ந்து விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள்.   அதனை தடுத்து நிறுத்தி எனது நிலத்தைத மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரியே தற்கொலைக்கு முயன்றேன் என்றார். சில ஆண்டுகளுக்கு முன் நெல்லை ஆட்சியரகத்தில் தீவைத்து ஒரு குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், தற்போது  தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  

Top