11/Aug/2021 07:09:17
ஈரோடு ஆக: கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாடகக்கலைஞர்களுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
ஈரோட்டை சேர்ந்த நாடக நடிகர் மாரிமுத்து(65). இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேடை நாடகங்களில் நடித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக நாடகங்களில் நடிக்க முடியாமல்போனது. இந்நிலையில், வருமானத்துக்கு வழியின்றி வறுமையில் வாடுகிறார். தனக்கும் தன்னைப் போன்ற நாடகக்கலைஞர்களுக்கும் அரசு உதவி செய்ய வேண்டுமென எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இது தொடர்பாக நாடக நடிகர் மாரிமுத்து கூறியதாவது: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியசேமூர் அருகிலுள்ள எஸ்.எஸ்.பி. நகரில் குடியிருந்து வருகிறேன் எனக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இரண்டு மருமகள் பேரக்குழந்தைகள் மொத்தம் 10 பேர் ஒரே வீட்டில் குடியிருந்து வருகிறோம். எனது மகன்கள் விசைத்தறி கூடத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார்கள் அவர்களுக்கும் தற்போது கொரோனா காலத்தில் வேலை இல்லை. வாழ்க்கைக் கடத்துவதற்கு வழியின்றி தவித்து வருகிறோம்.
தமிழக அரசு என்னைப் போன்ற நலிந்த கலைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் நாங்கள் ஓரளவிலாவது வறுமையிலிருந்து மீள முடியும் என்றார். ஈரோடு நாடக நடிகர் மாரிமுத்துவைப் போல தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான மாரிமுத்துக்கள் அரசின் உதவிக்காக காத்திருக்கின்றனர். அரசின் கருணை வெளிச்சம் இவர்கள் மீது படருமா?