logo
ஈரோடு நிதி நிறுவன அதிபர் கொலையில் சரணடைந்த 4 பேர்  3 நாள் விசாரணைக்குப்பின்  கோர்ட்டில் ஆஜர்

ஈரோடு நிதி நிறுவன அதிபர் கொலையில் சரணடைந்த 4 பேர் 3 நாள் விசாரணைக்குப்பின் கோர்ட்டில் ஆஜர்

10/Aug/2021 01:14:12

ஈரோடு, ஆக:ஈரோடு கருங்கல்பாளையம் வி.ஜி.பி. நகரை சேர்ந்தவர் மதி என்ற மதிவாணன்(40). அ.தி.மு.க. பிரமுகர். ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரில் அம்மா பொதுஇ-சேவை மையம் நடத்தி வந்தார். கடந்த 2-ஆம் தேதி இரவு இ—சேவை மையம் முன் 4பேர் கொண்ட மர்மகும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதற்கிடையில், மதிவாணனை கொலை செய்ததாக ஈரோடு கிருஷ்ணம்பாளையம்  சிந்தன் நகரை சேர்ந்த நிஜாமுதீன்(35), அதேபகுதியை சேர்ந்த வேல்முருகன்(21), கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த தேவா( 21), நாமக்கல் மாவட்டம் வெப்படையை சேர்ந்த விக்கி(25) ஆகியோர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் நீதிமன்ற நடைமுறைப்படி சேலம் மாவட்டம் ஓமலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் 4 பேரையும் நீதிமன்ற அனுமதியின்பேரில் மூன்று நாட்கள் காவலில் எடுத்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கொலையாளிகள் 4 பேரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது.   4 பேரிடமும் வீடியோ பதிவுடன் கூடிய ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளோம்.

நிஜாமுதீன், விக்கி உட்பட 4 பேரும் மதிவாணன் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தான். மதிவாணன் கடந்த 2015 ம் ஆண்டு ஈரோடு மரப்பாலம் நால் ரோடு டாஸ்மாக் கடையில் ரோகித் என்ற வெங்கடேஷ் என்பவரை மற்றொரு ரவுடியான ரமேஷ் என்ற பிரகலாதனை ஏவி விட்டு கொலை செய்தார். 

அதன்பின், இறந்து போன ரோகித் என்ற வெங்கடேஷ் உடன் இருந்த கலை என்ற கலைச்செல்வன், குணா என்ற குணசேகரன் ஆகியோரை பிரகாலதனுக்கு எதிராக மதிவாணன் தூண்டிவிட்டுள்ளார். இதனால், கடந்த 2019 ம் ஆண்டு ஈரோடு கருங்கல்பாளையம் பழைய போலீஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்த பிரகலாதனை, மதிவாணனின் பேச்சை கேட்டு கலையும், குணாவும் கொலை செய்தனர். இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு கலையும், குணாவும் ரவுடியாக வளம் வந்துள்ளனர்.

கலை, குணாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மதிவாணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிஜாமுதீன் இரு தரப்புக்கும் இடையே வந்து சமரசம் செய்துள்ளார். பின்னர், மதிவாணனிடம் குறிப்பிட்ட தொகையை பெற்று கலை, குணாவுக்கு செட்டில் செய்துள்ளார். அதன்பின்னர், அடி தடி சம்பவத்தில் நிஜாமுதீனுக்கும், மதிவாணனுக்கும் நேரடியாக  மோதல் ஏற்பட்டது.

இதில், நிஜாமுதீன் மதிவாணனை அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால், நிஜாமுதீன் மீது மதிவாணனுக்கு விரோதம் ஏற்பட்டது. இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் கலையையும், குணாவையும் ஒரே நேரத்தில் பிரகலாதனின் நண்பர்கள் பழிக்கு பழியாக கொலை செய்தனர். இதன்பின்னர், கடந்த மாதம் மதிவாணன், அவரது பிறந்த நாள் பார்ட்டிக்கு வந்திருந்த விக்கி என்ற வாலிபரிடம், நிஜாமுதீனை கொலை செய்யும் படி கூறியுள்ளார். 

ஆனால், அந்த நபர் நேரடியாக நிஜாமுதீனுடன் நடந்ததை கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த நிஜாமுதீன், மதிவாணனை இனியும் விட்டால் வெங்கடேஷ், பிரகலாதன், கலை, குணா போன்று நம்மையும் கொலை செய்து விடுவான் என கருதி, உடனடியாக திட்டம் திட்டியுள்ளனர். இதன்பேரில் கடந்த 2 ம் தேதி மதிவாணன் அவரது இ-சேவை மையத்தின் வளாகத்தில் செல்போன் பார்த்தபடி உட்கார்ந்திருந்தபோது, நிஜாமுதீன், விக்கி தலைமையில் 4 பேரும் அங்கு சென்று, மதிவாணன் சுதாரிப்பதற்குள் வெட்டி கொலை செய்துள்ளாகவும்  கூறினர். 

Top