logo
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே  சித்துப்பட்டியில் பகுதிநேர நியாயவிலைக் கடை: அமைச்சர் ரகுபதி திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சித்துப்பட்டியில் பகுதிநேர நியாயவிலைக் கடை: அமைச்சர் ரகுபதி திறப்பு

09/Aug/2021 10:12:00

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், சித்துப்பட்டியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன்  தலைமையில்  நடந்த நிகழ்வில், கூட்டுறவுத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட  பகுதிநேர நியாயவிலைக் கடையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (08.08.2021) திறந்து வைத்து முதல் விற்பனையினை துவக்கி வைத்தார். 

பின்னர், அமைச்சர் எஸ்.ரகுபதி  பேசியதாவது: 

தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். நார்த்தாமலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள விளத்துப்பட்டி அங்காடியில் இருந்து பிரிக்கப்பட்டுள்ள சித்துப்பட்டி பகுதிநேர நியாயவிலைக் கடை  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சித்துப்பட்டி பகுதிநேர நியாயவிலைக் கடை 158 குடும்ப அட்டைகளுடன் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இயங்கும். இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்று பயன்பெற முடியும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 690 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 310 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது திறக்கப்பட்டிருக்கும் சித்துப்பட்டி அங்காடி 311 -வது பகுதிநேர நியாயவிலைக் கடையாகும். 

கோவிட் தொற்று காலத்திலும் மக்களுக்காக பல்வேறு திட்டப் பணிகளையும்  மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுகள் மற்றும் நலத்திட்டங்களையம் முதல்வர் மேற்கொண்டுவருகிறார். முதல்வரிடம்  பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உங்கள் தொகுதியில் முதல்வர்  துறையின் கீழ் விரைவாக பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. 

மேலும்  தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் முதல்வர்  செயல்பட்டு வருகிறார் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி .

இதில், முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மற்றும் எம்.பழனியப்பன், துணைப் பதிவாளர் அண்ணாதுரை, கூட்டுறவு சார் பதிவாளர்கள் குமார், கருப்பையா உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  


Top