logo
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழ்அகதிகள் முகாம்களை  அகதிகள் மறுவாழ்வு நல இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழ்அகதிகள் முகாம்களை அகதிகள் மறுவாழ்வு நல இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

06/Aug/2021 11:50:55

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் ஜெசிந்தாலாசரஸ் , மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் (6.08.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், தோப்புக்கொல்லை, அறந்தாங்கி வட்டம், அழியாநிலை மற்றும் திருமயம் வட்டம், தேக்காட்டூர் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் அகதிகள் முகாம்களில் குடிநீர்; வசதி, மின்விளக்கு வசதி, சாலை வசதி, குடியிருப்பு வசதி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அகதிகளுக்கு கோவிட் தடுப்பூசி  வழங்கும் பணிகள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் பணிகளையும் ஆய்வு செய்து, அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.


பின்னர், ஜெசிந்தாலாசரஸ் கூறியதாவது:  தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, அகதிகள் முகாம்களில் வாழ்கின்ற தமிழர்களுடைய வாழ்க்கை தரம், அடிப்படை வசதிகள் குறித்து அறிந்திட முகாம்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 அகதிகள் முகாம்களில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்காக கல்வித் தொலைக்காட்சி காண்பதற்காக தொலைக்காட்சிப் பெட்டி அமைக்கப்படும்.  முகாம்வாசிகள்  வேலைவாய்ப்பை பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தவும், கல்விக் கடன் உதவி வழங்கவும், முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கவும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கி பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்  அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் ஜெசிந்தாலாசரஸ். 

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, சொர்ணராஜ், ஒன்றியக் குழுத்தலைவர் மேகலா முத்து,  வட்டாட்சியர்கள் செந்தில்நாயகி, காமராஜ், பிரவீனாமேரி, சதீஸ் சரவணக்குமார் (அகதிகள் நலன்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமுதவள்ளி, ரவி  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  


Top