logo
  சென்னையில் உள்ளதைப் போல மதுரையிலும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் துவங்க வேண்டும்:  கோவில் பூசாரிகள் நலச் சங்கம் கோரிக்கை

சென்னையில் உள்ளதைப் போல மதுரையிலும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் துவங்க வேண்டும்: கோவில் பூசாரிகள் நலச் சங்கம் கோரிக்கை

02/Aug/2021 05:29:33

சேலம், ஆக: நிர்வாகச் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காண சென்னையில் உள்ளதைப் போல மதுரை மாநகரிலும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை துவங்க ஆவன செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு  சேலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பாக, தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நல சங்க மாநிலத்தலைவர் பி.வாசு  தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

 அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய , சிறிய திருக்கோவில் சுமார் 40,000 கும் மேல் உள்ளது மற்றும் கட்டுபாட்டில் இல்லாத ஒருலட்சம் திருக்கோவில்கள் உள்ளன இதற்கு சொந்தமாக பல்லாயிரம் ஏக்கர் நில புலன்களும் கடைகளும், சிலைகளும், வீடுகளும் இதர சொத்துகளும் உள்ளன.அதுமட்டுமின்றி பெரிய திருக்கோவில்களின் தெய்வங்களுக்கு சொந்தமாக ஏராளமான விலை உயர்ந்த வைர மற்றும் தங்க நகைகள் உள்ளன. இவற்றின் மதிப்பு கோடிக்கணக்கான வை. இக்கோவில்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் லட்ச கணக்கானோர்  பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழகத்தை அவ்வப்போது ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், விஜயநகர மன்னர்களும், பல்லவ மன்னர்களும், தனவந்தர்களும் திருக்கோவில் தெய்வங்களுக்கு ஏராளமான விலைமதிப்பற்ற ஆபரணங்களையும் அணிகலன்களையும் நில புலன்களையும் கிராமங்களையும் தானமாக வழங்கினர். அதிக வருவாய் உள்ள சொத்துகள் நிறைந்த பெரிய திருக்கோவில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை வசம் காலப்போக்கில் கொண்டுவரப்பட்டன . 

அப்போது திருக்கோயில்களை நிர்வகிக்க குறைந்த அளவு அலுவலர்கள் இருந்தனர். ஆனால் காலப்போக்கில் எழுத்தர்கள் முதல் உதவியாளர்கள், உதவி ஆணையர்கள், துணை ஆணையர்கள், இணை ஆணையர்கள், கூடுதல் ஆணையர்கள், செயலர்கள் ,கூடுதல் செயலர்கள் என பல்வேறு அலுவலர்கள் நிர்வாகப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர் . இந்து சமய அறநிலையத் துறைக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு அத்துறைக்கென தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், திருக்கோவில் பணிகள் நிர்வாக ரீதியில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கூடுதலாக இணை ஆணையர் அந்தஸ்தில் புதிய ஒன்பது மண்டல அலுவலகங்கள் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் கூடுதலாக உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவியாக போதிய ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர் . தாலுகா அளவில் திருக்கோவில் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்துசமய அறநிலையத்துறை ஆணையர்  தலைமையகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வருகிறது. சென்னை யிலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள திருக்கோவில்களையும் அதன் நிர்வாக அதிகாரிகளையும் அலுவலர்களையும் அர்ச்சகர்களையும் இதர பணியாளர்களையும் கண்காணித்து செயல்படுவது ஆணையருக்கு கூடுதல் பணிச்சுமையை தந்து வருகிறது.

திருக்கோவில் பிரச்னைகள் தொடர்பான வழக்குகளுக்கு தீர்வு காண திருக்கோவில் நிர்வாக அதிகாரிகளும், பொதுமக்களும் நீண்ட தொலைவு பயணம் செய்து சென்னை ஆணையர் அலுவலகத்திற்கு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் பணியும் பாதிக்கப்பட்டு கால விரயமும் ஏற்பட்டு வருகிறது .ஆணையருக்கு  கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.

மதுரையிலும் இந்து சமய அறநிலையத்துறைஆணையர் அலுவலகம் அமைத்தால் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் அலுவலர்களும், பொது மக்களுக்கும் இதர பணியாளர்களும் தங்கள் பணி நிமித்தமான பிரச்னைகளுக்கு வட மாவட்டங்களில் இருந்து நீண்ட பயணத்தை மேற்கொண்டு சென்னைக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது .

எப்படி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மதுரைக்கிளை இருப்பதைப் போலவே இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னையிலும் மதுரையிலும் ஆணையர் அலுவலகம் இயங்குவது திருக்கோவில் நிர்வாகத்திற்கு  கூடுதல் திறனை அளிக்கும். பயணச் செலவும் குறையும் .கால விரயமும் தவிர்க்கப்படும்.. திருக்கோவில் நிர்வாகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண வழிவகை ஏற்படும். கோப்புகளும் விரைந்து  தீர்வு காணக்கூடிய  வழி பிறக்கும்.

இந்து சமயத்தின் இரு பிரிவுகள் சைவமும் வைணவமும். தமிழகத்தில் சைவத் திருக்கோவில்களும் வைணவ திருக்கோவில் களும் ஏராளமாக உள்ளன. சைவத் திருக்கோவில்களில் சைவ ஆகம விதிமுறைப்படி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. வைணவக் திருக்கோவில்களில் வைணவ வழிபாட்டு முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

எனவே ஒரே ஆணையர் தலைமையில் சைவ-வைணவ திருக்கோவில்களை நிர்வகிக்கும் முறையை அகற்றி சைவ திருக்கோயில்களை நிர்வகிக்க தனி ஆணையரும் வைணவ திருக்கோவில்களை நிர்வகிக்க தனி ஆணையரையும் நியமித்தால் சைவ-வைணவ திருக்கோவில்கள் மேலும் திறம்பட செயல்பட வழிவகை ஏற்படும். அதோடு தலைமை இடத்தில் பல ஆண்டுகளாக உயர் அதிகாரியாக இருப்பவர்கள் வேறு பகுதிக்கு மாறுதல் செய்வதின் மூலம் நிர்வாகம் எந்தவித விருப்பு வெறுப்பு இன்றி சிறப்பாக செயல்படும். 

சைவ வைணவ சமய அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகள் தேவை..

தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறை மூலம் முதல்முறையாக நடத்தப்பட்ட அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளில் பயிற்றுவிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அங்கு பயிலும் சைவ வைணவ மாணவர்கள் முரண்பட்டதாக இருந்தது. சைவ வைணவ அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் ஒரே பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறுவது என்பது முன்னுக்குப் பின் முரணான செயலாக இருந்தது.

ஏனெனில் வைணவ ஆகம விதிமுறைப்படி பயிற்சிபெற வேண்டிய மாணவர்கள் வேறுவழியின்றி இந்த பயிற்சி வகுப்பிலும் அதேபோன்று சைவ ஆகம விதிமுறைப்படி பயிற்சி பெற வேண்டிய மாணவர்கள் இதே பயிற்சி வகுப்பிலும் பயிற்சி பெற வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டது. 

இதனைத் தவிர்க்க சைவ ஆகம விதிமுறைப்படி பயிற்சி பெற அனுமதிக்கப்படும் மாணாக்கர்களுக்கு தனி பயிற்சி வகுப்பும் வைணவ ஆகம விதிமுறைப்படி பயிற்சிபெற அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு தனி பயிற்சி வகுப்பையும் இந்து சமய அறநிலையத் துறை அமைத்துத்தர வேண்டும். இதன் மூலம் சைவ வைணவ மாணவர்கள்  அவர்களது சமயம் சார்ந்த கோட்பாடுகளை  நன்கு பயிற்சி பெற வழிவகை ஏற்படும். இனி எதிர்காலத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் இம் முறையை பின்பற்றுவது அனைவருக்கும் உகந்ததாக இருக்கும்.

அர்ச்சகர் புத்தொளி பயிற்சி முகாம்:

இதே போன்று, இந்து சமய அறநிலைத்துறை ஆண்டுதோறும் நடத்தி வரும் அர்ச்சகர் புத்தொளி பயிற்சி முகாம்களிலும் சைவ-வைணவ அர்ச்சகர்கள் தனித்தனியே பயிற்சி பெற ஏற்பாடு செய்ய வேண்டும் .இந்த புத்தொளி பயிற்சி முகாம்களில், கிராம கோவில் பூசாரிகளையும் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி கோவில் பூசாரிகள் நலச்சங்கம் பலமுறை முந்தைய அரசில் இடம்பெற்றிருந்த இந்து சமய அறநிலை துறை அமைச்சருக்கும் ஆணையருக்கும்  நினைவூட்டுக் கடிதங்களை எழுதி இருந்தோம். அத்துடன் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்து இருந்தோம்.

அதற்கு சற்றும் செவி சாய்க்காமல் இருந்த இந்து சமய அறநிலை துறை ஆணையருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் மூலம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பெயரளவுக்கு ஆவன செய்வதாகக் கூறிவிட்டு இதுவரை இந்து சமய அறநிலைத்துறை நடத்திய அர்ச்சகர் புத்தொளி பயிற்சி முகாம்களில் ஒரு பூசாரியைக் கூட பயிற்சி பெற அனுமதிக்கவில்லை.

எனவே சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் தெய்வத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை நடத்தும் அர்ச்சகர் பயிற்சி முகாம்களில் கிராம கோவில் பூசாரிகளையும் அனுமதிக்கவேண்டும். தமிழக முதல்வர் தேர்தல அறிக்கையில் திருக்கோவில்களுக்கு அறிவித்த திட்டங்களை செயல்படுத்திட சென்னையில் உள்ள ஆணையர் அலுவலகம் நிர்வாக ரீதியில் இரண்டாக பிரிக்கப்பட்டு செயல் படுத்தினால் தான் திருக்கோவிலுக்கு அறிவிக்கபட்டுள்ள புதிய திட்டங்கள் திருக்கோவிலுக்கும்  ,பூசாரிகளுக்கும் சென்றடையும்.  

திருக்கோவில் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தமிழக முதல்வர்  இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோவில் பூசாரிகள் நலச்சங்கம்  வலியுறுத்துகிறது.

                            

Top