logo
புதுக்கோட்டை  தொழிலாளர் நல வாரியம் மூலம்1,200 பேருக்கு ரூ.20.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை தொழிலாளர் நல வாரியம் மூலம்1,200 பேருக்கு ரூ.20.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கல்

01/Aug/2021 01:34:08

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆட்சியர் கவிதாராமு முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில்,    சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி ,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்று  தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்  நல வாரிய உறுப்பினர் களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

பின்னர்,   அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:  முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மற்றும் இதர 17 நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர் களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். 

அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர் நல வாரியத்தின் 1,200 தொழிலாளர்களுக்கு ரூ.20.15 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் 38,821 கட்டுமான தொழிலாளர்களும், 21,905 அமைப்புசாரா தொழிலாளர்களும் என மொத்தம் 60,726 தொழிலாளர்கள் வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஓய்வூதியம், விபத்து நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே இவர்களுக்கு கோவிட் நிவாரண உதவித்தொகை ரூ.4,000 வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில்  முன்னாள் முதல்வர்  கலைஞரால்  1999 -ஆம் ஆண்டு தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் வாரியம் மற்றும் இதர 17 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டது.  

இதனால் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் அரசாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு என்றும் திகழும் என்றார் அமைச்சர் ரகுபதி.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கூறியதாவது:  தமிழகத்தில் உள்ள அனைத்துதரப்பு மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

இதன் ஒருபகுதியாக,   புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மற்றும் இதர 17 நல வாரியங்களில் பதிவு செய்துள்ளவர்களில்  1,200  தொழிலாளர்களுக்கு ரூ.20.75 லட்சம் மதிப்பில் ஓய்வூதியம், விபத்து நிவாரணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

ஏழை, எளிய மக்களின் நிலை அறிந்து திட்டங்களை நிறைவேற்றும் முதல்வராக செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் ஏற்பட்ட கோவிட் இரண்டாம் அலையை 45 நாட்களுக்குள் கட்டுப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

கோவிட் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு கோவிட் நிவாரண உதவித்தொகை, 14 வகையான மளிகைத் தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு சிமெண்ட் விலையை குறைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். 

முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழகத்தில் ரூ.35,000 கோடி மதிப்பில் அரசின் திட்டப் பணிகளுக்காக கட்டடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான தொழிலாளர்கள் மிகுந்த பயன் பெறுவார்கள். அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான திட்டங்கள்  அரசின் சார்பில் தொடர்ந்து செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா,  முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் பாலசுப்பிரமணியன், தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு, க. நைனாமுகமது, எம்.எம். பாலு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Top