logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்  காணொளிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் காணொளிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

01/Aug/2021 12:23:45

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு  தலைமையில் காணொளிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. 

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து  ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.  அந்த வகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோவிட் காரணமாக காணொளிக்காட்சி வாயிலாக நடத்தப்படுகிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை தொவித்துள்ளனர். 

 புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரை ஆண்டு சராசரி மழையளவு 754.66 மி.மீ. ஆகும். ஜூலை மாதம் வரை பெறப்பட வேண்டிய  இயல்பான மழையளவான 199.9 மி.மீ. -க்கு பதிலாக 374 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது.   இது இயல்பான மழையளவைவிட  87 சதவீதம் கூடுதலாகும். ஜூலை மாதத்தில் பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவு  54.03 மி.மீ  -க்கு பதிலாக 52.80 மி.மீ மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளது. 

2021-22 -ஆம் ஆண்டில் ஜூன் மாதம் முடிய நெல் 2071 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 114 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 149 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 934 எக்டர் பரப்பிலும், கரும்பு 46 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 60.10 எக்டர் பரப்பளவிலும், தென்னை 9 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள 33 வேளாண் விரிவாக்க மையங்களில் 178.492 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 18.4 மெ.டன் பயறு விதைகளும், 60.10 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 4.495 மெ.டன் சிறுதானிய விதைகளும், 3.59 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன.

விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்திடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 2827 மெ.டன்னும், டிஏபி 958 மெ.டன்னும், பொட்டாஷ் 1185 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 2870 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

விவசாயிகள் உரம் வாங்க செல்லும் பொழுது கட்டாயமாக ஆதார் அட்டை கொண்டு சென்று தங்களது கை ரேகையினை பதிவு செய்து  உரம் வாங்கிடவும் மண்வள அட்டையில் பரிந்துரை செய்துள்ள  உர அளவினை வாங்கி பயன்பெறுவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வளர்ந்து  வரும் விவசாய தொழில்நுட்பங்களை உரிய நேரத்தில் விவசாயிகளிடம் சேர்க்கும் வகையில் வேளாண் அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் உழவர் - அலுவலர் தொடர்பு  திட்டத்தை தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  உழவர் அலுவலர் தொடர்பு திட்;டத்தின்  மூலம் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், துணை அலுவலர்கள், வேளாண் உதவி இயக்குநர்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் ஆகியோர் கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பச் செய்திகளை வழங்குவதுடன் களப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுவருகின்றனர்.

ஒவ்வொரு கிராம ஊராட்;சிகளிலும் குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகளை தேர்ந்தெடுத்து (அதில் 2 பேர் SC,ST  பிரிவினர்) அவர்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானியத் திட்டங்கள் குறித்து விளக்கங்களும் பயிற்சிகளும் உரிய கால இடைவெளியில் தொடர்ந்து வழங்கப்படும். எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றார் ஆட்சியர் கவிதா ராமு

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் உள்ளிட்டோர்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Top